‘‘கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசுவதா?’’ - அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் திமுக அரசுக்கும், அமைச்சர் துரை முருகனுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கள்ளச் சாராய விற்பனை, கள்ளச் சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை, மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகள். இவற்றைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. அண்மையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராய விற்பனை என்பது ஆளும் கட்சியினரின் ஆசியோடு நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், ஆளும் கட்சியினர்மீது அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டின.

அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை நிருபிக்கும் வகையில், மூத்த அமைச்சராக உள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றி இருக்கிறார். அமைச்சர், தன்னுடைய உரையில், உழைப்பவர்கள் தங்கள் அசதிக்காக மது குடிக்கின்றனர் என்றும்; டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் 'கிக்' இல்லாததால், கள்ளச் சாராயம் குடிக்கின்றனர் என்றும்; கள்ளச் சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என்றும்; மனிதர்களாக பார்த்து திருந்தாவிட்டால், கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்றும் கூறி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

அதாவது, கள்ளச் சாராயத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சொன்னாலே, கள்ளச் சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், 'கிக்' இல்லாததால் கள்ளச் சாராயம் குடிக்கப்படுவதாக அமைச்சரே தெரிவிப்பது, கள்ளச் சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும் அரசே இதை ஊக்குவிப்பது போல் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசுக்கு, அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் துரைமுருகன் கூறுகையில், "அன்றைக்கே தலைவர் அவர்கள் சொன்னார்கள், ஆந்திராவில் சாராயம் இருக்கிறது, இந்தப் பக்கம் பெங்களூரில் சாராயம் இருக்கிறது, பாண்டிச்சேரியில் சாராயம் இருக்கிறது, சுற்றி எல்லா இடங்களிலும் சாராயம் இருக்கின்றது, சுற்றி எரிகிற கற்பூர வளையத்திற்குள், எரியப்படாத கற்பூரமாக எத்தனை நாட்களுக்கு தமிழ்நாடு இருக்கும்" என்று சொன்னார்.

இதனை நியாபகம் வைத்துச் சொல்லும் அமைச்சர் துரைமுருகனுக்கு, 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மறைந்த கருணாநிதி சொன்னதும், தமிழ்நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சொன்னதும் மறந்துவிட்டது போலும். இல்லை, தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட போலி வாக்குறுதி என்று நினைத்துவிட்டாரோ என்னவோ! ஒருவேளை நல்லதை மறந்து, இல்லை மறைத்து, தீயதை உரைப்பதுதான் திராவிட மாடல் போலும்!

அமைச்சரின் பேச்சினை உற்றுநோக்கும்போது, தவறான யோசனை சொல்லக்கூடிய அமைச்சர் அரசனுக்கு அருகில் இருப்பது, எழுபது கோடி பகைவர்கள் சூழ்ந்து கொள்வதற்குச் சமம் என்ற திருவள்ளுவரின் திருக்குறள்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.

எது எப்படியோ, ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவன் கொஞ்சம், கொஞ்சமாகத் தன் நாட்டை இழப்பான் என்ற வள்ளுவரின் வாய்மொழியை மனதில் நிலைநிறுத்தி, கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும். கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

29 mins ago

வணிகம்

40 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்