சென்னை: “புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும். உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியும், ‘உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச் சாராயத்தை நோக்கி செல்கின்றனர்” என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, ‘தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை’ என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்தச் சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழத்தில் சுமார் 5,000 மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழகத்துக்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச் சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல் துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன.
» மெட்ரோ ரயில் பணிகள்: சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூலையில் அடையாறு சந்திப்பை அடையும் - தகவல்
» வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்: ஜி.கே.மணி
தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச் சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமைதான். மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.
அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல்: தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான சனிக்கிழமை பல்வேறு முக்கிய அறிவிப்பாக கள்ளச் சாராய விற்பனைக்கு தண்டனையை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படுவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago