சென்னை: தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டி ஊக்கத் தொகையை வழங்கி வந்தார். இந்நிலையில் அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பின்னர் கட்சியின் சார்பில் முதல்முறையாக கல்வி விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழா 2 கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு,கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை,நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் தொகுதிவாரியாக பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற 852 மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தவெக தலைவர் விஜய்தலைமை தாங்கி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த 3 மாணவிகளுக்கு வைரக் கம்மல்களும், 10-ம் வகுப்பு தேர்வில் முதல் 6 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வைர மோதிரத்தையும் பரிசாக அளித்து கவுரவித்தார். நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு சிறப்பு பரிசாக ரூ.5 ஆயிரத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார். தொடர்ந்து விழாவில் பங்கேற்க அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையை, தானே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
» தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு: மாணவர், பெற்றோரிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
» குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில்
முன்னதாக விழாவைத் தொடங்கி வைத்து விஜய் பேசியதாவது: மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறீர்கள். உங்களுக்கு நான்சொல்லிக் கொள்வது, எல்லா துறையும் நல்ல துறைதான். நீங்கள் எந்தத் துறையை தேர்வு செய்தாலும் அதில் 100 சதவீத உழைப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம். மருத்துவம், பொறியியல் மட்டும்தான் நல்லதுறை என்று சொல்ல முடியாது. நமது தமிழகத்தில் உலகத் தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாகவே உள்ளனர்.
எனவே நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள்தான். இதை அரசியல்ரீதியாக மட்டும் சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதைத்தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன்.
அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள்.
அப்போதுதான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை நடக்கிறது, சமூக தீமைகள் பற்றியெல்லாம் தெரியவரும். அதைத் தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலகப் பார்வையை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது.
சமீபகாலமாக தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது. போதை பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. இப்போது ஆளும் அரசு இதையெல்லாம் தவறவிட்டு விட்டார்கள் என்று சொல்லாம். ஆனால், இதைப் பற்றி எல்லாம் பேச நான் இங்கு வரவில்லை. அதற்கான மேடை இதுவல்ல. சில நேரங்களில் அரசாங்கத்தைவிட நமது வாழ்க்கையை நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விஜய் அமர்ந்துகலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். விழாவுக்கு வந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், புதுவை மாநில செயலாளர் சரவணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் அப்புனு, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் பூக்கடை குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மீதமுள்ள 19 மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஜூலை 3-ம் தேதி நடைபெற உள்ளது.
வெற்றி திலகமிட்ட பெண்: விஜய் மண்டப வாசலில் காரில் வந்து இறங்கியதும் அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். மண்டபத்துக்குள் சென்றதும் எல்லா பகுதிகளுக்கும் சென்று அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் அமர்ந்து உரையாடினார். அங்கிருந்து எழுந்து மேடைக்கு செல்ல முயன்றபோது ஒரு பெண் ஓடி வந்து விஜய் நெற்றியில் வெற்றித் திலகம் வைத்து வாழ்த்தினார். அந்த திலகத்துடனேயே விழாவில் விஜய் கலந்து கொண்டார்.
போதை எதிர்ப்பு உறுதிமொழி: விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து கவனத்தை ஈர்த்தார். போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மாணவர்களிடம் 'Say no to drugs' மற்றும் 'say no to temporary pleasure' என்ற ஆங்கில வாசகங்களை கூறி மாணவர்களை திரும்ப சொல்ல வைத்தார்.
மாணவர் சின்னத்துரைக்கு விருது: சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சாதி பிரச்சினையில் நாங்குநேரியை சேர்ந்த பட்டியலின மாணவர் சின்னத்துரை சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார். இச்சம்பவத்தால் கையில் பலத்த வெட்டு பட்டதால் ஆசிரியர் துணையுடன் எழுதி பிளஸ் 2 தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றார். அவரையும் தவெக தலைவர் விஜய் வரவழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
வைர கம்மல், வைர மோதிரம்: பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த, சென்னை, கொளத்தூரை சேர்ந்த எஸ்.பிரதிஷா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த இ.மகாலட்சுமி, தாம்பரத்தை சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு விஜய் 'வைர கம்மல்' வழங்கி கவுரவித்தார். அதேபோல 10-ம்வகுப்பில் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் அ.சந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த க.காவ்யாஸ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த ஆர்.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த டி.காவ்யா ஜனனி, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கு ‘வைர மோதிரம்‘ வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago