சென்னை: சமூக நீதிக்கு எதிரான குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் பாஜக அரசுக்கு எதிராக திமுக மாணவர் அணிச் சார்பில் வரும் ஜூலை 3-ஆம் தேதி வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: “நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பாஜக. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு. சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை - சமத்துவம் இல்லாத தேர்வு முறை - கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை - அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை -அவர்களது மருத்துவக் கனவைச் சிதைத்து, “நீ டாக்டர் ஆக முடியாது” என்றும், “உனக்குத் தகுதியில்லை” என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.
மேலும், நீட் தேர்வு என்பதே ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது - வினாத் தாள்களை திருடுவது - விடைத்தாள்களை மாற்றி வைப்பது - மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் திமுக நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.
இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4 ஆம் தேதியே முடிவுகள் வெளியாகின.
» நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது: மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது
» நாடு முழுவதும் நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீர் தள்ளிவைப்பு
இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற அன்றே வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்கள்.
நீட் தேர்வு என்பது, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று நான்கு பாடப்பிரிவுகளில் இருந்து 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு மட்டும் தவறாக பதில் அளித்திருந்தால் அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் பெறலாம். இப்படி இருக்கு, சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர். நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது. எனவே இந்த தேர்வில், ஒருவர் பெறுவதற்கு சாத்தியமில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றிருந்தது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.
இதற்கு முன்பு கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இவ்வளவு மாணவர்கள் முதலிடம் பிடித்தது, எவ்வாறு சாத்தியமாகும் என்றால், வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளி வருவது, பணம் பெற்றுக் கொண்டு விடைகளை பகிர்வது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இத்தேர்வு முறையே மோசடி என்று உறுதி செய்கிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏற்கெனவே குறிப்பிட்ட ஹரியாணாவில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள், என்.சி.இ.ஆர்.டி.,யின் முந்தைய பாடத் திட்டத்தில் விடை எழுதுவதா, புதிய பாடத்திட்டத்தில் விடை எழுதுவதா என்று சந்தேகம் ஏற்பட்டதால் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியவில்லை என கூறி, காலத்தாமதம் ஏற்பட்டதாகவும், இழந்த நேரத்துக்காக, கருணை மதிப்பெண் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
உடனே, தேசிய தேர்வு முகமை தானாக முன்வந்து அந்த தேர்வு மையத்தையும் சேர்த்து அருகிலிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கும் சேர்ந்து 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என கூறி வழக்கு முடிக்கப்பட்டது. இதனால் மட்டுமே ழுழு மதிப்பெண்கள் பெற்ற 67 மாணவர்களில், 50 பேர் கருணை மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்றுள்னர்.
மேற்குறிப்பிட்ட பிரச்சினை பலருக்கும் ஏற்பட்டிருந்தாலும், அனைவரும் நீதிமன்றத்தை நாடியிருக்க மாட்டார்கள், புகார் அளித்திருக்க மாட்டார்கள். மீகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளது. இதனால், தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை இத்தேர்வு முறை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், பன்ச் மகால் மாவட்டம், கோத்ராவில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் பெரிய முறைகேடு நடந்த நாடறிந்ததே. அதாவது, தேர்வு மையத்தில் ஜெய் ஜலராம் பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் துஷார் பட் என்பவர், தேர்வு மையத்தின் துணை சூப்பிரண்டாக இருந்துள்ளார்.
அவர், பணியில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம், “நீட் தேர்வில் விடை தெரியாவிட்டால் அதனை எழுதாமல் விட்டு விட சொல்லியும், தேர்வு முடிந்த பிறகு சரியான விடைகளை அவரவர் விடைத்தாளில் எழுதி தரப்படும்” எனக்கூறி ரூ. 10 கோடி அளவிற்கு பேரம் பேசி 16 மாணவர்களின் தேர்வு எண் மற்றும் அவர்களது பெயர் கொண்ட விவரத்தை செல்போனில் வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெளியே செய்தி வரவே அவர் மாட்டிக் கொண்டார். ஆனால், இதில் சந்தேகம் எழுப்புவது என்னவென்றால், முறைகேடு நடைபெற்ற ஒரு இடத்தில் மட்டும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். ஆனால், எத்தனை இடங்களில் மறைமுகமாக முறைகேடு நடைபெற்றுள்ளது என்பது யாருக்கு தெரியும்?
நீட் தேர்வு என்பதே சமூக நீதி, சமத்துவம், சமவாய்ப்பு, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு போன்ற காரணங்களுக்காக தான் ஆரம்ப நாள் முதல்வர் ஸ்டாலின் மிகவும் அழுத்தம் திருத்தமாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறார். அவரது ஆணைக்கிணங்க, கழக மாணவர் அணி 2017 முதல் பல்வேறு தொடர் போராட்டங்களையும், தமிழ்நாட்டிலுள்ள அத்தனை முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர் அமைப்புகளை ஒன்றினைத்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மூலம் பல்வேறு விவாதங்கள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என அனைத்து அறப்போராட்டங்களையும் கழக மாணவர் அணி முன்னெடுத்து நடத்தி உள்ளது.
கழக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்ற நாள் முதலே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த நீட் தேர்வை எதிர்த்தும், அதனை தமிழ்நாட்டிலிருந்து நீக்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமைகளையும், அவர்கள் இழக்கும் வாய்ப்பை பெற்றுத் தரவும் போராடி வருகிறார். அவரது வழிகாட்டுதலோடு, கழக இளைஞர் அணியுடன் மாணவர் அணியும் இணைந்து மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் உண்ணாநிலை போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது.
கழக ஆட்சி அமைந்த உடன், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து, நீட் தேர்வினால் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தது தி.மு.க. அந்த குழுவின் பரிந்துரையின்படி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டபம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் தரப்பிலிருந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது வரை காத்திருப்பில் உள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு நீட் தேர்வினை 2017-இல் கொண்டு வந்தது முதல் தி.மு.க. கடுமையாக எதிர்த்து வந்தது. தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது. அப்போதெல்லாம் பாசிச பா.ஜ.க. அரசு தி.மு.க. மட்டும் தான் நீட் தேர்வை எதிர்கிறது என்றும்; தமிழ்நாடு மட்டும் தான் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்கிறது என்றும் விமர்சித்து வந்தது.
தி.மு.க.வின் போராட்டங்களை விளம்பர அரசியல் என்றெல்லாம் சொல்லி குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடி தரும் வகையில் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு தான் சமூகநீதியின் தொட்டில்! சமவாய்ப்பு, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான நீட் தேர்வை இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலில் எதிர்க்கும் என்பதில் எந்த ஐயமில்லை என்று தெரிவித்து, என்றைக்கும் நீட் தேர்வை எதிர்த்தே தீர வேண்டுமென்று சென்னார்.
ஆனால், இன்று நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபடிகளை உணர்ந்த பா.ஜ.க.வை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர். நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டம சோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தராத நிலையில், இன்று (28.6.2024) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தமிழக முதல்வர், முன்மொழிந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமென்றும் - நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீட் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் வரும், 03.07.2024 அன்று காலை 09.00 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago