சென்னை: “மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளில் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன.இதுவரை இருந்திராத அளவுக்கு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது.
தேர்வுகள் காலதாமதமாகத் தொடங்கியதாகக் காரணம் காட்டி, விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தக் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, இவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.
பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக தகவல்கள்.தேர்வு மையத்தில் தேர்வு மைய கண்காணிப்பாளரே, விடைத்தாள்களை நிரப்பிய ஊழல் புரிந்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள், பல ஆண்டு காலம் உழைத்து, பெரும் செலவழித்து இந்தப் போட்டித் தேர்வுக்கு தயாரான மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்து தவறே நடைபெறவில்லை என்று கூறிய மத்திய அரசு, பின்பு உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, இந்த தேர்வை நடத்தும் என்டிஏ அமைப்பின் தலைவரையே மாற்றியுள்ளது. தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
» “இந்த செட்-அப் எல்லாம் இந்திய அணிக்காகவே” - இங்கிலாந்து ஜாம்பவான்கள் தாக்கு | T20 WC
» அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
பல ஆண்டுகாலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகமும், தமிழக மக்களும் தனியே போர்த் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலங்களை உணர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழகத்தின் குரல், இந்தியாவின் குரலாக எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்த சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெற நாம் எடுத்த முயற்சிகள் வெற்றியடைய செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றிடவும், தேவையான முன்னெடுப்பாகவே, இந்த மாமன்றம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தீர்மானம்: கிராமப்புற ஏழையெளிய மாணவர்களின் மருத்துவக் கல்லூரி வாய்ப்புக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும். தொடர்ந்து, பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்த நீட் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையிலும் தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணை சட்டத்தில் தேவைப்படும் திரு்த்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago