சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அனைத்து நில ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ள நிலையில், பட்டா மாற்றம், நில எல்லை அளவை, புல வரைபடம் என அனைத்தையும் ஆன்லைனில் விண்ணப்பித்து, வீட்டிலிருந்தே பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் வாங்குபவர், விற்பவர் பட்டா மாறுதல், புல எல்லை அளவீடு உள்ளிட்ட அனைத்து வருவாய் ஆவணங்கள் சார்ந்தசேவைகளுக்காக முன்பெல்லாம் வருவாய்த்துறை அலுவலகங்களை நாடித்தான் ஆகவேண்டியிருந்தது. ஆனால், தற்போது அனைத்து ஆவணங்களையும் எவ்வித அலைச்சலுமின்றி ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும். இவை அனைத்தும், வருவாய் ஆவணங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சாத்தியமாகியுள்ளது.
மேலும், வருவாய் மற்றும் பதிவுத்துறை என இரு துறைகளுக்கும் ஒருங்கிணைந்த மென்பொருள் பயன்படுத்தப்படுவதால், உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் தானாகவே நடைபெறுகிறது. முழுமைபெற்ற இந்த பட்டாவை,‘ https:eservices.tn.gov.in ’ என்ற இணையதளத்தில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, பல்வேறு வசதிகளையும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை செய்துள்ளது. இதுகுறித்து அத்துறையின் இயக்குநர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அனைத்து வருவாய் ஆவணங்களும் ஏற்கெனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. சமீபத்தில் நத்தம் பகுதி ஆவணங்களும் மாற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் நத்தம் ஆன்லைன் பட்டா மாற்றத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், நிலத்தின் எல்லை அளவீடு மேற்கொள்ள பொதுவாக மக்கள் மனு அளிப்பார்கள். இது தற்போது ஆன்லைன் வழியில் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக மக்கள் வங்கியில் சென்று கட்டணம் செலுத்தி அந்த ரசீதுடன், தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும். இது தற்போது, இணையதளம் அல்லது கைபேசி வாயிலாக ஜிபே உள்ளிட்ட யுபிஐ வாயிலாகவும் கட்டணம் செலுத்தலாம்.
» ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டு விமான நிலையம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, சர்வேயரும் ஆன்லைனிலேயே நேரத்தை வழங்குவார். அவர் வருவதை தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்து, அதன்பின் வரைபடமும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். அதை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யலாம். இந்த வசதி புதிதாக செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், நில ஆவணங்கள் தொடர்பான அனைத்து சேவைகளும் ஆன்லைனில் வந்துள்ளது.
வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் யாரும் பட்டா மாற்றத்துக்காக செல்ல வேண்டியதில்லை. அதில், வேறு ஏதேனும் தகராறு, பிரச்சினை இருந்தால் மட்டுமே செல்ல வேண்டியதிருக்கும்.
உட்பிரிவுடன் கூடிய பட்டா விவகாரத்தில், ஆன்லைனில் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்கெனவே இருந்தது. தற்போது, இ-சேவை மையம் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது கைபேசி மூலம் உரிய கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மனு அளித்த பிறகு, 6 மாதங்கள் வரைமுன்பு கிடைக்கவில்லை என்ற புகார் இருந்தது. தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் 45 நாட்களுக்குள் தந்துவிடுகிறோம். தற்போதுள்ள சூழலில் 60 நாட்களுக்கு மேல்எங்குமே பாகம் பிரிப்பு பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள் நிலுவையில் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 30 நாட்களுக்குள் நிலத்தை அளந்து பட்டா அளிப்பதை இலக்காக நிர்ணயித்துள்ளோம். இல்லாவிட்டால், பட்டா அளிக்க முடியாததற்கான காரணத்தை தெரிவித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலையாமல் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை மாநிலம் முழுவதும்33 ஆயிரம் முழுமையான பட்டா உட்பட85 ஆயிரம் பட்டாக்கள், பத்திரப்பதிவு நிகழ்வின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 5.75 லட்சம் பட்டாக்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. நத்தம் பட்டா தொடர்பாக 49,333 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago