எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலை ஆக.30-க்குள் நடத்தி முடிக்க ஐகோர்ட் உத்தரவு 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக இருமுறை நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் மூன்றாவது முறையாக போட்டியிடக் கூடாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருமுறை தலைவராக பதவி வகித்த எஸ்.சந்தன்பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் ஆஜராகி, ''எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான அடிப்படை விதிகளில் தொடர்ச்சியாக இருமுறை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்கள், மூன்றாவது முறையாக போட்டியிடக்கூடாது என எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆகவே, மனுதாரர் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், பார் கவுன்சில் அதை தடுக்கும் நோக்கில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு மட்டும் அதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது'' என வாதிட்டார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.கே.சந்திரசேகர், ''வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே எழும்பூர் நீதிமன்றத்துக்கு அவ்வாறு உத்தரவிடப்பட்டது'' என வாதிட்டார்.

இதேபோல எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பி்ல் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், ''இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் 2019-ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதனால் பதவிக்காலம் முடிந்த பிறகும் பழைய நிர்வாகிகளே இன்னும் பதவி வகித்து வருகின்றனர். எனவே எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட வேண்டும்'' என வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''வழக்கறிஞர்கள் சங்கம் என்பதும் நீதித்துறையின் ஒரு அங்கம் தான். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் சுமுகமாக நடத்தி, அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உள்ளது. அதேபோல நீதித்துறையின் மாண்பு மற்றும் வழக்கறிஞர்களின் தொழில் கண்ணியத்தை காக்க வேண்டிய கடமையும் பார் கவுன்சிலுக்கு உள்ளது.

ஒழுங்கீனத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பார் கவுன்சில், ஜனநாயக ரீதியில் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கான தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த வேண்டும். பதவிக்காலம் முடிந்த பின்னரும் சங்க நிர்வாகிகள் பதவியில் நீடிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எனவே, கடந்த 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தலை, அந்த சங்கத்துக்கான அடிப்படை விதிகளைப் பின்பற்றி பார் கவுன்சில் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தேர்தலுக்கு தேவையான பிற அலுவலர்களையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலே நியமித்துக் கொள்ளலாம். இந்த தேர்தலுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடந்தது தொடர்பான அறிக்கையை பார் கவுன்சில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்