“குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு இந்திரா காந்தி தப்ப முயன்றது வரலாற்று உண்மை” - அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: “தேர்தலில் தோற்றபின் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு தன் குடும்பத்துடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவசரநிலை பிரகடனம் முடிந்தபோது காந்தி குடும்பம் வெளிநாடு தப்ப முயன்றதாகப் பேசிய அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டு காலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை, பாஜகவும் அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று செல்வப்பெருந்தகை கூறி இருக்கிறார்.

இந்திரா காந்தியின் பெருமையைப் பற்றி பேசக்கூட, நேருவின் மகள் என்றுதான் தொடங்க வேண்டியிருக்கிறது. இதில் என்ன பெருமை இருக்கிறது? வாரிசு என்பதால் மட்டுமே தலைமைப் பதவிக்கு வரும் நேரு குடும்பத்தினரைவிட, 5 கட்சிகளில் மாறி மாறிப் பயணம் செய்திருந்தாலும் தனது கடின உழைப்பால் ஒவ்வொரு கட்சியிலும் சிறப்பாக பணியாற்றி, இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உயர்ந்திருக்கும் செல்வப்பெருந்தகை பெருமைக்குரியவராக எனக்கு தெரிகிறார்.

பாதியில் வந்ததால் காங்கிரஸ் கட்சியின் வரலாறு குறித்து செல்வப்பெருந்தகைக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திரா காந்தியை பிரதமர் பொறுப்பில் அமரவைத்தது காமராஜர்தான். பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், கட்சியில் இருந்து அவரை நீக்கியதும் காமராஜர்தான். இதை செல்வப்பெருந்தகைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காமராஜர் தனது வாழ்வின் இறுதிவரை இந்திரா காந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இந்திரா காந்தியின் பெருமைகள் வரிசையில் வருமா என்பதை செல்வப்பெருந்தகை விளக்க வேண்டும்.

நெருக்கடி நிலையை அறிவிக்கும் முன்னரே, நமது நாட்டை நெருக்கடி நிலையில்தான் இந்திரா காந்தி வைத்திருந்தார் என்பதும் அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே அவரை கடுமையாக எதிர்த்தனர் என்பதும் நெருக்கடி நிலை அறிவிக்கும் முன்னர் நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதலபாதாளத்தில் கிடந்ததும் செல்வப்பெருந்தகைக்கு தெரியுமா?

நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருந்த பல மாநில அரசுகளைக் கலைத்ததும், அதில் இன்றைய காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான திமுக அரசும் ஒன்று என்பதையும் செல்வப்பெருந்தகை மறந்துவிட்டார் என்று எண்ணுகிறேன். இத்தனைக்கும், நெருக்கடி நிலை அறிவிப்பையும், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகள் நியமனத்தில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்ற அரசியல் சாசனத்தில் 39வது பிரிவு திருத்தத்தை மனமுவந்து ஆதரித்த கட்சி திமுக. இன்று நீங்கள் இருவரும் அதனை மறக்கவோ, மறைக்கவோ முயற்சிக்கலாம். ஆனால், வரலாறு மாறாது.

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், அவரது மகன் சஞ்சய் காந்தி தலையீட்டை இல்லை என்று சொல்கிறாரா செல்வப்பெருந்தகை? சஞ்சய் காந்தியின் கார் நிறுவனத்துக்குக் கடன் வழங்குவதற்காகவே ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை மாற்ற வசதியாக, தனக்கு வேண்டப்பட்டவரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்த வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு ஊழலும், அரசியல் அத்துமீறலும், ஜனநாயக விரோதமும் தவிர வேறு என்ன பெரிய பெருமை இருந்துவிடப் போகிறது?

இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்பது குறித்த விசாரணை நான்கு நாட்களில் நீதிமன்றத்தில் வரவிருக்கிறது என்பது தெரிந்ததும் அரசியல் சாசனத்தையே திருத்திய காங்கிரஸ் கட்சியும் அதன் சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகளும், இன்று அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவோம் என்று கூறித் திரிவதை விட நகைமுரண் வேறு இருக்க முடியுமா?

ஜனநாயகத்துக்கு விரோதமாக, நெருக்கடி நிலையை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் கோபத்துக்கு ஆளாகி, அதன் பின்னர் வந்த தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி, எந்த நாட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றினார் என்று செல்வப்பெருந்தகை பெருமைப்படுகிறார் என்பது தெரியவில்லை.

543 உறுப்பினர் கொண்ட மக்களவையில் தொடர்ந்து 3 தேர்தல்களாக இரட்டை இலக்கத்தைத் தாண்டாத ஒரு கட்சியின் தலைவருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு. இதனையும் ராகுல் காந்தியின் சாதனையாகப் பேசுவது செல்வப்பெருந்தகையின் அறியாமையைக் காட்டுகிறது.

நேரு மட்டுமே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்று வரலாறு எழுதி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸின் பங்கு என்ன என்பது எப்படித் தெரியும்? ஆர்எஸ்எஸ்-ஐ விடுங்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேறு எந்த தலைவர்களின் வரலாறாவது உங்களுக்குத் தெரியுமா? அவர்களது குடும்பங்கள் எங்கே இருக்கின்றன என்பது தெரியுமா?

தேர்தலில் தோற்றபின் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு தன் குடும்பத்துடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை. உங்கள் வசதிக்கு அரசியல் சாசனத்தை மாற்றி இருக்கலாம். வரலாற்றை மாற்ற முடியாது என்பதை செல்வப்பெருந்தகைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்