சித்திரை திருவிழாவுக்காக முதல்வர் உத்தரவின்பேரில் வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரில் கள்ளழகர் இறங்கினார். இதனால் இந்தாண்டு நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையால் பக்தர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவது சிறப்பானது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் மக்கள் வைகை ஆற்றில் குவிந்து கள்ளழகரை தரிசிப்பது வழக்கம்.
நிறத்தின் அம்சம்
இத்திருவிழாவில் பங்கேற்காதவர்கள்கூட, அழகர் என்ன பட்டு உடுத்தி இறங்கினார், அழகர் இறங்கியபோது வைகை ஆற்றில் தண்ணீர் வந்ததா என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.
வெண்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாட்டில் அமைதியும் சமாதானமும் உண்டாகும் என்றும் பச்சை பட்டு உடுத்தினால் நாட்டில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழித்து எங்கும் பசுமையான சூழல் நிலவும் என்பதையும் குறிப்பால் அழகர் உணர்த்திவிட்டு செல்வதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.
இந்தாண்டு எப்படியாவது தண்ணீர் திறக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆர்வம் காட்டினார். வைகையில் 32 அடி மட்டுமே தண்ணீர் இருந்ததால், மதுரை குடிநீருக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என அதிகாரிகள் தயங்கினர். இதனால் வழக்கம்போல் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பி, இதன் வழியாகவே அழகர் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் தீவிர ஆலோசனை
இந்நிலையில், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மழை இல்லாதபோதும் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 3 நாட்கள் நல்ல மழை பெய்தது. இதனால் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் வைகை அணையில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. இதனால் வைகை அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது.
இதையடுத்து பொதுப்பணித் துறையில் முதல்வர் தனக்கிருக்கும் அனுபவத்தால், வைகையில் தண்ணீர் திறப்பதால் குடிநீர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
மேலும் வைகை ஆற்றுப்படுகையின் வறண்ட நிலை, குடிநீர் திட்ட கிணறுகளில் அதலபாதாளத்துக்கு சென்ற நீர்மட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். எவ்வளவு தண்ணீர் திறந்தால் மதுரைக்கு சரியான நேரத்துக்கு சென்றடையும், ஒரு துளி தண்ணீர்கூட வீணாகக்கூடாது என அனைத்து அம்சங்களையும் தனது அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்படி ஏப்.27-ம் தேதி மாலை வைகை அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கள்ளழகர் இறங்கும் இடத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்னதாக சரியாக வந்து சேர்ந்தது.
தண்ணீரில் அழகர் இறங்கியதுடன், வைகையில் அழகர் சுற்றிவந்தபோது, பக்தர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் ஆற்று நீரை அழகர் மீது வாரி இறைத்து மகிழ்ந்தனர். ஆற்றில் தண்ணீர் வந்தது, அழகர் பச்சைப்பட்டு உடுத்தியது, இதுவரை இல்லாத அளவுக்கு திரண்ட பக்தர்கள் கூட்டம் என அனைத்து அம்சங்களும் சித்திரை திருவிழாவை முழுமையாக வெற்றி பெறச் செய்தன.
இதைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நேற்று காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது.
100 நாட்களுக்கு போதுமான குடிநீர்
மதுரை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
கடந்த 2004 ஆண்டு திறக்கப்பட்ட தண்ணீர் அழகர் இறங்கும் வரை வரவில்லை. கடந்தாண்டு மழை இல்லாததால் திறக்கப்படவில்லை. மழை இல்லாத ஆண்டுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு, 10 ஆண்டுகளில் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தது தற்போதுதான். அந்தளவுக்கு முதல்வர் கணக்கீடு செய்து 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். 4 மாவட்ட குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் பயன்பட்டுள்ளது.
வைகை அணையில் நேற்று 550 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. மதுரை நகருக்கு தினமும் 5 மில்லியன் கனஅடி தண்ணீர் தேவை. இதன்படி ஜூலை மாதம் வரை 100 நாட்களுக்கு குடிநீர் விநியோகிக்கலாம் என்பதால் எந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் மனம் குளிரச் செய்த தண்ணீர்
இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, “முதல்வர் தனது அனுபவத்தை பயன்படுத்தி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரில் இறங்கிய அழகரின் மனம் குளிர்ந்ததுபோல், லட்சக்கணக்கான மக்களின் மனமும் குளிர்ந்தது. தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்வர், துணை முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago