“கள்ளக்குறிச்சி நிவாரண உதவியை அரசியலாக்கி விமர்சிப்பது சரியல்ல” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் பட்டியலின மக்கள். அவர்களுக்கு அரசு வழங்கும் மனிதாபிமான நிவாரண உதவியை அரசியலாக்கி விமர்சிப்பது சரியல்ல,” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்ட 17 பேர் புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அசம்பாவிதமான சம்பவத்தால் தற்போது வரை 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பெண்கள், ஒரு திருநங்கையும் அடங்குவர். தற்போது வரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 25 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 16 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும் என 3 பெண்கள், ஒரு திருநங்கை உள்ளிட்ட 48 பேர் மரணமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்களும், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பாணியாளர்கள் என மொத்தம் 220 பேர் முழுநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி 600 படுக்கைகளுடன் கூடிய பெரிய மருத்துவமனை. இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று பிரத்யேகமாக இன்னும் 50 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. மெத்தனால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக பார்வை பரிபோகும். இருதயம், சிறுநீரகம், கல்லீரல் படிப்படியாக செயலிழக்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பல்வேறு வகையான சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மது அருந்தி நீண்டநேரமானவர்களின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கியது என்பதற்கு பின்பும் கூட மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால் அதிகமான இறப்புகளை சந்திக்க நேர்ந்தது.

புதுச்சேரியைப் பொருத்தவரையில் ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேர் அவசர சிகிச்சை வார்டிலும், 8 பேர் பொது வார்டிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் மிக கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மருத்துவமனை நிர்வாகம் அனைத்து வகையான சிகிச்சைகளையும் 200 சதவீதமாக செய்து போராடி வருகிறது.சேலத்தில் 31 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் நல்ல முறையிலும், 8 பேர் கவலைக்கிடமான நிலையிலும் உள்ளனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ‘ஒமேப்ரஸோல்’ மருந்து கையிருப்பில் இல்லை என்று குற்றம் சாட்டினார்.உடனடியாக நான் அது குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்தபோது தமிழகம் முழுவதும் 4.42 கோடி மாத்திரைகள் கையிருப்பில் இருக்கிறது. இவ்வளவு மருந்து கையிருப்பில் இருக்கும்போது பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுவது எதிர்கட்சித் தலைவருக்கு அழகல்ல. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருந்து பற்றாக்குறை எனக் கூறியிருப்பதும் தவறான தகவலாகும்.

கள்ளச் சாராயத்துக்கான மெத்தனால் எங்கிருந்து வந்தது என தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கியுள்ளார். ஆகவே புதுச்சேரியில் இருந்து வந்தது என தமிழக அரசு எப்போதும் குற்றம்சாட்டவில்லை. புதுச்சேரியும் தமிழகத்தின் அங்கம் தான். ஏற்கெனவே மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தற்போதைய சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2001 அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 53 பேர் இறந்துள்ளனர். 200 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது. குஜராத்தில் 7 ஆண்டுகளில் 8 கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் அந்த மாநில முதல்வர்களை யாரும் பதவி விலக சொல்லவில்லை.

ஆனால், இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார். கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் பட்டியலின மக்கள். அவர்களுக்கு அரசு வழங்கும் மனிதாபிமான நிவாரண உதவியை அரசியலாக்கி விமரிசிப்பது சரியல்ல. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்