கள்ளச் சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை: சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் இபிஎஸ் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதற்கு திமுக முக்கிய நிர்வாகிகளே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். நெஞ்சை பதறவைக்கக்கூடிய, மக்களை கொதிப்படைய வைத்துள்ள இந்த துயர சம்பவம் குறித்துக்ககூட சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினரானதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவது எங்கள் கடமை. அதற்காகத்தான் அனுமதி கேட்டோம். தொடர்ந்து அனுமதி கேட்டும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இதைப்பற்றி பேச அனுமதி கேட்ட எங்களை பேரவைத் தலைவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார். சட்டமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை. பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரை தூக்கி வந்து வெளியே விட்டிருக்கிறார்கள். அவரை கைது செய்ய முனைகிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஜனநாயகப் படுகொலை. ஹிட்லர் ஆட்சியைப் போல சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: அவ்வப்போது, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைக்கூட்டம் நடத்துவதாக செய்திகள் வருகின்றன. இருந்தும் இந்த துயர சம்பவம் எப்படி நடந்தது? இது ஒரு திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதல்வர். கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில்தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது. கள்ளச்சாராயம் விற்கப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் காவல்நிலையம் உள்ளது. நீதிமன்றமும் அங்குதான் உள்ளது. நீதிமன்றத்தின் வளாகத்தை ஒட்டியே கள்ளளச்சாராய விற்பனையை செய்திருக்கிறார்கள். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் அலுவலகமும் அங்கேதான் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அங்குதான் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய அந்த இடத்திலேயே தொடர்ந்து 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்று சொன்னால், இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் நியாயம்.

மருத்துவமனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை: கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துவிட்டார்கள். இன்னும் எவ்வளவு பேர் உயிரிழப்பார்கள் என தெரியவில்லை. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கள்ளச்சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எத்தனை பேர், இறந்தவர்கள் எத்தனை பேர், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மருத்துவமனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. அந்த மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகிறாரகள், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி ஒன்றுமே தெரியவில்லை.

ஓமிப்ரசோல் மருந்து இல்லை: கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நான் நேரில் சென்றேன். அந்த மருத்துவமனையை அதிமுக ஆட்சிக் காலத்தின்போது பிரம்மாண்டமாக கட்டிக்கொடுத்தோம். ஆனால், அங்கு தற்போது போதிய மருத்துவர்கள் இல்லை; மருந்துகளும் இல்லை. கள்ளச்சாராய விஷத்தைப் போக்கக்கூடிய முக்கிய மருந்தான ஓமிப்ரசோல் (Omeprazole) மருந்து இல்லை. மருந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் சொல்கிறார். இது பச்சைப் பொய். ஓமிப்ரசோல் மருந்து சுத்தமாக இல்லை.

ஆளும் கட்சிக்கு துணை போனார் மாவட்ட ஆட்சியர்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 19ம் தேதி 3 பேர் இறந்தார்கள். ஆனால், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த செய்தியாளர் சந்திப்பில், ஒருவர் வயிற்று வலி காரணமாக இருந்தார் என்றும், 2வது நபர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார் என்றும், 3வது நபர் வலிப்பு காரணமாக இறந்தார் என்றும் அவர் பொய்யான செய்தியை வெளியிட்டார். அரசின் தூண்டுதலின்பேரிலேயே அவர் இவ்வாறு பச்சைப் பொய்யை கூறியுள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்துத்தான் 3 பேர் மரணம் அடைந்தார்கள் என்ற உண்மைச் செய்தியை மாவட்ட ஆட்சித் தலைவர் அப்போதே கூறி இருந்தால், கள்ளச்சாரயம் குடித்தவர்கள் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பார்கள். அதுமட்டுமல்லாது, மாவட்ட ஆட்சித் தலைவரின் பேட்டிக்குப் பிறகு பலர் (விஷயம் தெரியாமல்) கள்ளச்சாராயம் குடித்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி கொடுக்கும்போது அந்த மாவட்ட திமுக செயலாளர், எம்எல்ஏ அருகில் இருக்கிறார். எனவே, அழுத்தத்தின் காரணமாகவே ஆட்சித் தலைவர் அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார். எனவே, அரசு இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். மற்ற அதிகாரிகளை இடைநீக்கம் செய்த தமிழக அரசு, அரசுக்கு துணையாக இருந்த மாவட்ட ஆட்சியரை மட்டும் இடமாற்றம் செய்திருக்கிறது. ஆளும் கட்சி இதில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.

திமுக முக்கிய நிர்வாகிகளே காரணம்: இந்த சம்பவத்துக்கு திமுக முக்கிய நிர்வாகிகளே காரணம். இல்லாவிட்டால், கள்ளக்குறிச்சி மையப் பகுதியில் 3 ஆண்டுகளாக எவ்வாறு கள்ளச்சாராயம் விற்க முடியும்? திமுகவைச் சேர்ந்த 2 கவுன்சிலர்கள் இதற்கு உடந்தையாக இருந்ததாக அங்குள்ள பொதுமக்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். அதுகுறித்தெல்லாம் காவல்துறை விசாரணை நடக்கவே இல்லை. கட்சிக்காரர்களைக் காப்பாற்றுவதில்தான் ஆட்சியாளர்கள் குறிக்கோளாக இருக்கிறாரகள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்றவரின் வீட்டின் கதவில் ஆளும் கட்சியின் உதயசூரியன் சின்னம் ஒட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆளும் கட்சி, கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகிறது என்பது உறுதியாகிறது. ஆட்சி அதிகாரத்தை வைத்து கள்ளச்சாராயம் விற்றதன் விளைவாக விலைமதிக்க முடியாத 50க்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.

கண்டுகொள்ளாத கூட்டணி கட்சிகள்: கள்ளக்குறிச்சியில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளபோதிலும், திமுக கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கூட்டணி வையுங்கள். தேர்தலுக்குப் பிறகு மக்கள் பிரச்சினைகளைப் பேசுங்கள். இல்லாவிட்டால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகள் கண்டனம் கொடுக்காதது வேதனை அளிக்கிறது.

சிபிஐ விசாரணை வேண்டும்: அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடியில் 2 பேர் காவல்நிலையத்தில் இறந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். எனவே, இந்த விஷயத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணை சரியாக நடக்காது. தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் சரியாக செயல்படுமா? மக்களுக்கு நீதி கிடைக்குமா? உண்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காகவே நாங்கள் வழக்கு தொடுத்திருக்கிறோம். ஒரு வருடத்துக்கு முன் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தார்கள். இந்த விஷயத்தை சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விசாரணை என்ன ஆனது என்பது குறித்து எந்த உண்மையும் வெளிவரவில்லை. வெளிப்படைத்தன்மையே இல்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கும். எனவேதான் சிபிஐ விசாரணை வேண்டும்.

நிதி உதவி அவசியம்: கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். கிராம மக்களின் நிலையை அறிந்தவன். இறந்தவர்களின் குடும்பங்களில் பிஞ்சுக் குழந்தைகள் இருக்கிறார்கள். அரசு உதவவில்லை என்றால் அவர்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, அரசு உதவ வேண்டும். அரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயரம் நிகழ்ந்திருக்காது. இது அரசின் தவறு. குடித்தவர்களின் தவறு அல்ல.

கனிமொழி எங்கே போனார்?: அதிமுக ஆட்சியின்போது, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கனிமொழி, தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டதாகக் கூறினார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து தற்போது அவருக்கு ஒன்றும் தெரியாதுபோல.

அதிமுக போராட்டம்: கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ள நிலையில், முதல்வர் அவைக்கு வரவில்லை. நாட்டு மக்கள் மீது அவருக்கு அக்கரை இல்லை. நாட்டு மக்களை துச்சமாக நினைக்கிறார். சட்டப்பேரவையில் ஆளும் கட்சி தலைவர்கள் பேசுவதை ஒலிபரப்பு செய்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை ஒலிபரப்ப மறுக்கிறார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயர சம்பவத்துக்குக் காரணமாக இருந்த திமுக அரசை கண்டித்தும், முதல்வர் மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்