தமிழகத்தில் பருவமழை மீட்பு, நிவாரண பயிற்சி பெற்றவர்களை தயார் நிலையில் வைக்க தலைமைச் செயலர் அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை: பேரிடர் காலங்களில் பிரத்யேக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றவர்களை கண்டறிந்து, மீட்பு நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.

தலைமைச்செயலகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடர்பான பேரிடர் ஆயத்தப்பணிகள் குறித்த ஆலோனைக்கூட்டம் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், தென்மேற்குப் பருவமழை தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர், இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு இயல்பாக அல்லது இயல்பை விட சற்று கூடுதலாக இருக்கும் என்றும், குறுகிய காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை அவ்வப்போது பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். பின்னர் மற்ற துறைகளின் ஆயத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வழங்கிய அறிவுறுத்தல்கள்: பேரிடர் காலங்களில் பிரத்யேக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றவர்களை கண்டறிந்து, மீட்பு நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். பெருநகர சென்னை காவல்பிரிவில் உள்ள பேரிடர் மீட்புப் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள, தேசிய பேரிடர் மீட்புப் படையினை தேவையான இடங்களில் முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.

வெள்ள நீர் தேங்கும் போது பாதிப்புக்குள்ளாகும் முக்கியமான உட்கட்டமைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டர்கள், மின் கட்டமைப்புகளை உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கும், பொதுமக்களுக்கு தடையின்றி பெட்ரோல், டீசல் கிடைக்கும் வகையில் வாகனங்கள் மூலம் எரிபொருள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதே போல், தடையில்லா கைபேசி இணைப்பை ஏற்படுத்த கைபேசி கோபுரங்களுடனான வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து துறைகளும் நிலையான வழிகாட்டு நெறிமுறையை தயாரித்து வெளியிட வேண்டும். மக்களுக்கும் பேரிடர் எச்சரிக்கையை வழங்க வேண்டும்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பேரிடர் அனுபவங்களை கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும், தன்னார்வலர்களைக் கண்டறிந்து, அவர்களை பேரிடர் காலங்களில் ஈடுபடுத்தும் வகையில், உரிய பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பல்வேறு துறைகளின் செயலர்கள், சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்கள், காவல், ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக்காவல்படை, வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்