கள்ளச் சாராய மரணங்கள்: திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஜூன் 24-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் ஜூன் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில், கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் தற்போதுவரை 42 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும்; இன்னும் பலபேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இந்தக் கோர சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கள்ளச் சாராயம் அருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழகத்தில் மக்கள் விரோத திமுக அரசு பதவியேற்ற இந்த மூன்றாண்டுகளில் நடைபெறுகின்ற இரண்டாவது மிகப் பெரிய கள்ளச் சாராய மரண சம்பவம் இது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது, அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், என்று குடும்பத்தோடு சேர்ந்து கருப்பு சட்டை, கையில் பதாகை என நாடகங்களை அரங்கேற்றியவர் தான் ஸ்டாலின். தற்போது, பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகளை செய்வது மட்டுமல்லாமல், கள்ளச் சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருள் புழக்கத்தை தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, “தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் அதிகரிக்கிறது” என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்லி அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால், அதை செவிமடுக்கக்கூட மனமில்லாத அரசாக இந்த திமுக அரசு இருந்து வருகிறது. அதன் விளைவாக, அப்பாவி மக்களின் உயிரை பலி கொடுத்திருக்கிறது இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள், அரசு எந்திரமும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் எந்த அளவுக்கு சட்டவிரோத கள்ளச் சாராய கும்பலுக்கு துணை போயிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. கள்ளச் சாராயம் அருந்தி இரண்டு பேர் இறந்துவிட்டார்கள் என்று முதல் செய்தி வந்தவுடனேயே அரசு எந்திரம் துரிதமாக செயல்பட்டிருந்தால், பல அப்பாவி பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும்.

ஆனால், கள்ளச் சாராய கும்பலை பாதுகாக்கும் நோக்கத்தோடு “மரணத்துக்குக் காரணம் கள்ளச் சாராயம் அல்ல, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வேறு காரணங்கள்” என்று மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளே பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர். மரண எண்ணிக்கை அதிகரித்து நிலைமை கைமீறிப் போய்விட்ட பிறகே ‘அதிகாரிகள் மாற்றம், நிவாரணம் அறிவிப்பு’ என்கிற நாடகங்களை அரங்கேற்றியுள்ளார் திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின்.

அதுவரை, இந்த படுபாதகச் செயலுக்கு ஆளும் அரசு துணை போயிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இதற்கு முன்பு, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோது, கள்ளச் சாராயம் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், என்று அப்போதும் நான் சொன்னேன். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, வழக்கை சிபிசிஐடி-யிடம் ஒப்படைத்தார். அந்த வழக்கு இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு தார்மிகப் பொறுப்பேற்று, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்; இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தியும்; இனியும் இதுபோன்றதொரு சம்பவம் தமிழகத்தில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக சார்பில் ஜூன் 24 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்டு கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுகவின் சார்பில், திமுக அரசைக் கண்டித்தும், நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்