கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 36 ஆக அதிகரிப்பு: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் கள்ளச் சாராயம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாரேனும் சிகிச்சைக்கு வராமல் இருக்கின்றனரா என வீடு வீடாகச் சென்று சோதனை செய்து அழைத்து வந்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை வரை 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,

அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சந்திக்க உள்ளார்.

இதனிடையே உயிரிழப்புகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து இன்று காலை 10 மணி நிலவரப்படி 36 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பெண்களும் அடங்குவர். இறந்தவர்களில் இதுவரை 25 உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டி, அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற எம்.எஸ்.பிரசாந்த், இன்று மருத்துவமனையில் ஆய்வு செய்தார். உயிரிழப்பின் எண்ணிக்கை 36 என வெளியான தகவல் குறித்து அவரிடம் கேட்டபோது, சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றார்.

கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் சரக டிஐஜி உமா தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பந்தல் - குளிர்சாதனப் பெட்டிக்கு தட்டுப்பாடு: கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 29 பேர் உயிரிழந்திருப்பதால் சிறுவங்கூர் சாலை, காட்டு நாயக்கன்தெரு உள்ளிட்டப் பகுதிகளில் அடுத்தடுத்த வீடுகளில் திரும்பிய பக்கமெல்லாம் பந்தலும் அழுகுரலுமாக உள்ளது.

29 பேரது உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களது உடலை வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்த குளிர்சாதனப் பெட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் உடலை திறந்தவெளியில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீடுவீடாக சோதனை: அமைச்சர் மா.சு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில், இன்று (ஜூன் 20) காலை 7.30 மணியளவில் 27 ஆண்கள், ஒரு பெண், ஒரு திருநங்கை என 29 பேர் உயிரிழந்தது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 109 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படனர். மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வராமல் இருக்கிறார்களா எனக் கண்டறிய சுகாதார குழுவினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு சிலர் அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார். காலை 10 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 36 என அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு: கள்ளச் சாராய விவகாரத்தை தொடர்ந்து, மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தரும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான பாஸ்கரன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்