கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி 14 ஆக அதிகரிப்பு - நடந்தது என்ன? | HTT Explainer

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை கள்ளச்சாராயம் அருந்திய நிலையல், புதன்கிழமை 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மதுவிலக்குப் பிரிவு போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ்(46), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ்(45), கந்தன் மகன் சேகர்(61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட 43 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்தவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62) மற்றும் இந்திரா (38) ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் அங்கு தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேபோன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். வீரமுத்து (33), சிவா (32), அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55) ஆகிய 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75) தனகோடி (55) மற்றும் டேவிட் (28) ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீஸார் கைதுசெய்து, அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தியதில் மெத்தனால் வேதியியல் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து சேலம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் இருந்து 4 சிறப்பு மருத்தவக் குழுவினர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய அருந்தி பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர். 12 ஆம்புலன்ஸும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை மேற்பார்வையிட தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முகாமிட்டு, சிகிச்சைப் பெற்றுவருவோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆட்சியர் மற்றும் எஸ்பி மீது நடவடிக்கை: கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசு, ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் என்பவரை நியமித்துள்ளது. அதேபோன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.

மேலும் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா,திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன்,காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: சம்பவம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், “கள்ளக்குறிச்சி நகரில் கஞ்சா விற்பனையும், கள்ளச்சாராயம் தடையின்றி நடைபெறுகிறது. தற்போது சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாகக் கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல.அரசு உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி: கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கருணாபுரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி. இப்பகுதி தொழிலாளர்கள் பலர் வேலை செய்துவிட்டு, உடல் வலியைப் போக்கு மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் தான் பலர் மது அருந்தி வுந்துள்ளனர். கள்ளச்சாராயம் விலை மலிவு என்பதோடு, அதன் போதை வீரியம் அதிகம் என்பதால் அப்பகுதி மக்கள் கள்ளச்சாரயத்தை வாங்கி பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு பெயர்போனது என்பது ஊரறிந்த ரகசியம் என்ற போதிலும், அவ்வப்போது போஸீஸார் மதுவிலக்கு சோதனை என்ற பெயரில் பல ஆயிரம் லிட்டர் பேரல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து, அழித்து வந்த போதிலும், அங்கு கள்ளச்சாரயத்தை இதுவரை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்