மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

By கி.மகாராஜன் 


மதுரை: மறுவாழ்வு வசதிகளை செய்யும் வரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் இரு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 11.02.2028-ல் முடிகிறது. குத்தகை காலம் முடிந்த பிறகு தேயிலை தோட்ட நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கீழ் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு முன்பு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே தொழிலாளர்களை வெளியே அனுப்புவதால், தாமாக முன்வந்து ஓய்வு பெறும் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.1.4 லட்சம் முதல் 2.80 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

60 வயதை தொட்டவர்களுக்கு எந்த இழப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை. மாஞ்சோலை தொழிலாளர்கள் சொந்த இடம், வீடு இல்லாமல் உள்ளனர். பலர் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசிக்கின்றனர். தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை அரசு செய்யக்கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

எனவே மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி, அதில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டவும், தொழிலாளர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்ட கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், குடும்பத்தில் ஒருவருக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கவும், மாற்றுப்பணி வழங்கும் வரை ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், வழக்கறிஞர் பினேகாஸ் வாதிடுகையில், “இலங்கை தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அரசு ரப்பர் கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு போன்ற வசதியை வழங்க வேண்டும்,” என்றனர். அரசு தரப்பில், மாஞ்சோலையில் தேயிலை தோட்டம் நடத்தி வரும் பிபிடிசி நிறுவனம் தனியார் நிறுவனம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்