மேற்கு வங்க ரயில் விபத்து: இபிஎஸ், ஜி.கே.வாசன் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

இதற்கிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ரயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜிகே வாசன்: “மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேற்குவங்கம் டார்ஜிலிங்கில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் 15 பேர் உயிரிழந்திருப்பதும், பலர் படுகாயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது.

ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தீவிர உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய மேற்குவங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து மீண்டும் இது போன்ற விபத்துகள் நடைபெறக்கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க மத்திய ரயில்வே துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும். ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE