வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது. வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ம் ஆண்டு நடைபெற்றது. காவல்துறையால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு முன்னதாக ஜூலை 13-ம் நாள் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினர். திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

2020-ம் ஆண்டில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வன்னிய மக்களுக்கு 10.50சதவீத இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அதற்கான நடைமுறைகளில் நிகழ்ந்த சில குளறுபடிகள் காரணமாக அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 2022 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் ஒரே மாதத்தில் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர்களுக்கு இன்று வரை சமூகநீதி வழங்கப்படவில்லை.

இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும். பாமக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE