பக்ரீத் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை ஜூன் 17 -இல் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி கே. பழனிசாமி: இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

ஓபிஎஸ்: "ஒற்றுமையே உயர்வு தரும்" என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒற்றுமை உணர்வு மேலோங்கிட வேண்டும்; வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ராமதாஸ்: இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும். பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாதது தான் உலகம் முழுவதும் இன்று நிலவும் அனைத்து மோதல்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாக உள்ளது. பக்ரீத் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது.

அன்புமணி ராமதாஸ்: இறைபக்தியை வலியுறுத்தும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் சொல்லும் பாடம் தான் உலகின் பகையை ஒழிக்கும் பாடம் ஆகும். அந்த பாடத்தை நாம் அனைவரும் கடைபிடித்தால் உலகிலுள்ள அனைவரும் சகோதரர்களாகி விடுவார்கள். அப்படி ஒரு அதிசயம் நிகழ வேண்டும் என்பது தான் அமைதியையும், மகிழ்ச்சியையும் வேண்டும் அனைவரின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும்.

சு. திருநாவுக்கரசர்: மேலான அன்பு, மனிதாபிமானம், பொருமை ஈகை ஆகியனவற்றின் அடிப்படையில் தன்னலமற்ற நிலையில் உருவாகுவதுதான் தியாகம். இந் நன்னாளில் நபிகள் (ஸல்) நாயகம் போதித்த சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், மன்னிப்பு, மனித நேயம், அன்பு ஆகியனவற்றை சாதி, மத, மொழி, இன பாகுபாடுகளைத் தாண்டி கடைபிடித்து மனித சமுதாயம் தழைத்தோங்கவும், மனித குலம் நிம்மதியாய் மகிழ்வுடனும், வளமுடனும், வாழ்ந்திடவும் அருள் புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் நல் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

டிடிவி தினகரன்: தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE