இண்டியா கூட்டணியை ஸ்டாலின் வழிநடத்த திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவை: இண்டியா கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிநடத்த வேண்டும் என, கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

கோவை கொடிசியா பகுதியில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பேசியது:

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை: முதல்வர் ஸ்டாலினின் உழைப்பு இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. மூன்றாண்டு திட்டங்களின் நற்சான்றாக 40 தொகுதிகளில் மக்கள் வெற்றியைத் தந்துள்ளனர். நிதி ஆதாரம் இல்லாமல் திறமையாக கையாண்டு நாடே திரும்பி பார்க்கும் வகையில் கடைசியில் வைக்கப்பட்ட துறைகள் எல்லாம் முன்னணி துறையாக தொழில் புரட்சியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பிரதமர் மோடி அரசால் கூட்டணி ஆட்சியை நடத்த முடியாது. இந்த ஆட்சி எப்போது கவிழும் என்று தெரியாது. பாஜகவுக்கும், அதன் அடிவருடியான அதிமுகவுக்கும் இடமில்லை என சாதித்து காட்டியிருப்பவர் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட்டிருந்தால் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: அநாகரிகமாக, தரம் தாழ்ந்து பிரதமர் பேசினார். தேர்தலுக்குப் பிறகு திமுக அழிந்துவிடும் என்றார். தேர்தலுக்கு பிறகு யார் டெபாசிட் இழந்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கருத்து திணிப்புகளுக்கு மாறாக அறுதிப்பெரும்பான்மை பெற முடியாத கட்சியாக பாஜக நிலைகுலைந்துள்ளது. தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றி அணியை உருவாக்கி இருந்தால், இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: திராவிட கொள்கை என்றைக்கும் வெல்லும். அதை வெற்றிகள் சொல்லும். 40 பேரும் அலங்கார பொம்மைகள் அல்ல. இவர்கள் சர்வாதிகாரத்துக்கு தடை போடுவார்கள். ஜனநாயகம் மருத்துவமனையை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு முதல்வர் இண்டியா கூட்டணியை வழிநடத்த வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்: தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாத மண் தமிழ்நாடு. தொடர் வெற்றிகளுக்கு முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, யுக்திகள், ஆளுமை, கூட்டணி பலம் ஆகியவை தான் காரணம். சாதி,மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. அதற்கு சிதம்பரம், தருமபுரி, கோவையில் கிடைத்த வெற்றியே சான்று.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ: பெரியார், அண்ணாவின் திராவிட அரசியலை அரை நூற்றாண்டு காலத்துக்கு கட்டிக் காத்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெற்றியை காணிக்கையாக்குகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்: தேர்தல் வெற்றி மூலம் இந்தியாவுக்கான வருங்கால அரசியல் திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: சர்வாதிகாரத்துக்கு எதிரான தீர்ப்பு தந்த தமிழக மக்களுக்கும், முதல்வருக்கும் பாராட்டுகள்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: இந்த வெற்றிக்கு முழு முதல் காரணம் முதல்வர் ஸ்டாலின். கொங்கு மண்டலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை தர வேண்டும். சிறப்பு நிதியை முதல்வர் ஒதுக்கி தர வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: தேர்தலில் தோல்வியடையாத சாதனை தலைவர் கருணாநிதி. அவர் வழியில் மக்களவைத் தேர்தலில் வெற்றியைகுவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் மெளரியா: இந்த கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி: கோவை மண்ணை வைத்து அரசியல் களத்தில் சவால் விடுத்தவர்களுக்கு, அவர்களை இதே மண்ணில் வீழ்த்தி திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சிறுபான்மை, விளிம்புநிலை மக்களின் அச்ச உணர்வை போக்கியுள்ளார் ஸ்டாலின்.

ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான்: பிரதமர் மோடிக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. 40 எம்பி-க்கள் என்ன செய்வார்கள் என கேட்கின்றனர். அதற்கு காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

விழாவில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் மற்றும் வெற்றி பெற்ற 40 எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE