ஆந்திராவுக்கு குடிபெயர்வோம்: பரந்தூர் போராட்ட குழு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 2 ஆண்டுகளாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களுக்கான வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக முடிவு செய்துள்ளனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை ஜூன் 24-ம் தேதி சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக ஏகனாபுரம் என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகள், நிலங்கள் மொத்தமாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களது போராட்டம் ஜூன் 24-ம் தேதி 700-வது நாளை எட்டுகிறது. அதுவரை தீர்வு கிடைக்காவிட்டால் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர். ஆந்திர அரசிடம் தஞ்சம் கேட்டு ஒரு குழுவினர் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களை வழி அனுப்பி வைக்க 13 கிராம மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஜூன் 24-ம் தேதி ஏகனாபுரம் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்படுகின்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் அந்த இடத்தில் வந்து கூடுமாறு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ப.ரவிச்சந்திரன், ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோவிடம் கேட்டபோது, “வேறு வழியே இல்லாமல்தான் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநில அரசை அணுக உள்ளோம். அதன் முதல்கட்டமாக ஜூன் 24-ம் தேதி சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையெனில் கண்ணீருடன் வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE