தமிழக நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரை பக்தர்கள் செல்ல தனி பாதை: ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழக நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரை பக்தர்களுக்கான தனிப்பாதை வசதி ஏற்படுத்தக் கோரிக்கையில் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உரிய உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள் பெரும்பாலானவை இரு வழிச்சாலையாக இருக்கின்றன. இந்தச் சாலைகளில் போதுமான தடுப்புகள் இல்லை. வாகனங்களில் அதிக ஒளி வீசும் முகப்பு விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

வாகனங்களில் அதிக ஒளிரும் முகப்பு விளக்குகளை பயன்படுத்த பல்வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இல்லை. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தலை, கை, உடைமைகளில் ஒளிரும் பட்டைகள் அணிந்தால் விபத்துகள் நிகழ்வது தடுக்கப்படும்.ஆத்தூர்- திருச்செந்தூர், திருச்செந்தூர்-பாளையங்கோட்டை- அம்பை பாதையில் பாதயாத்திரை செல்லுவோருக்கு நடைபாதை அமைக்கப்பட்டு, பாதையில் வெப்ப தடுப்பு பெயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வசதியை பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் அனைத்து சாலைகளிலும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் வலதுபுறமாக செல்வதையும், ஒளிரும் ஸ்டிக்கர்கள், பட்டைகள் அணிவதை உறுதிப்படுத்தவும், தனிநடைபாதை ஏற்படுத்தி அதில் வெப்ப தடுப்பு பெயிண்ட் அடிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE