திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த 4 நாள் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த 4 நாள் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த 1994-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. குத்தகை நிர்ணயம் தொடர்பாக எஸ்ஆர்எம் குழுத்துக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கும் இடையே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், உரிய தொகையை செலுத்த எஸ்ஆர்எம் குழுமத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், குத்தகை காலம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குத்தகை காலம் நிறைவடைந்ததாக நேற்று மாலை ஹோட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக திருச்சி மண்டல மேலாளர் (பொறுப்பு) என்.டேவிட் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஹோட்டலை கையகப்படுத்த வெள்ளிக்கிழமை காலை ஹோட்டலுக்கு சென்றனர்.

இதற்கு ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஹோட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி ஹோட்டல் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று முறையிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஹோட்டல் தொடர்பாக டிடிடிசி மற்றும் ஹோட்டல் நிர்வாகம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அரசு உத்தரவிட்டால் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு சார்பில், இனிமேல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் எந்த உத்தரவு நகலும் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஹோட்டல் நிர்வாகத்துக்கு 4 நாட்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி ஹோட்டலை கையகப்படுத்த 4 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மனுதாரர் ஹோட்டல் நிர்வாகத்தை ஜூன் 18 மாலை வரை தொடரலாம். இந்த தடை நீட்டிக்கப்படாவிட்டால் தானாகவே ரத்தாகிவிடும்.

இந்நிலையில், ஹோட்டலை வெள்ளிக்கிழமை காலை அரசு கையகப்படுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் ஹோட்டலில் 80 சதவீத அறைகளில் ஆட்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில் திட்டவட்டமான அறிக்கை மற்றும் டிடிடிசி எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்த போதிலும் விருந்தோம்பல் தொழில்துறையாக இருப்பதால் இடைக்கால தடை வழங்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE