தமிழகத்தில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 33% பெண்கள் சேர்ந்துள்ளதாக ஆணைய தலைவர் தகவல்

By ப.முரளிதரன்

சென்னை: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் 33 சதவீத பெண்கள் சேர்ந்துள்ளனர் என்று ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தீபக் மொகந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் (பிஎஃப்ஆர்டிஏ) தீபக் மொகந்தி சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியவது: “பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme) சேர்ந்துள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதிய திட்ட நிதியை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்திய அரசின் சார்பாக அறங்காவலராக இவ்வமைப்பு செயல்படுகிறது.

தேசிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பயன் அளிக்கும் திட்டம். 18 முதல் 70 வயது நிரம்பியவர்கள் வரை தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில், கடந்த 8-ம் தேதி வரை 1.5 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதில், 92 லட்சம் பேர் அரசு ஊழியர்கள் ஆவர். 56 லட்சம் பேர் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆவர்.

தமிழகத்தில் 2,600 கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளன. இதன் மூலம், 56 லட்சம் ஊழியர்கள் பயன் அடைந்துள்ளனர். கடந்த மே 14-ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீட்டு சந்தை மதிப்பு ரூ.12 கோடியாக இருந்தது. இந்த ஓய்வூதிய திட்டம் மிகவும் எளிமையானது, குறைந்த தொகையும் முதலீடு செய்யலாம், மேலும் அதிக லாபம் ஈட்டித் தரக்கூடியது. குறைந்த பட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்ய முடியும்.ஆண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்யும் திட்டங்களும் உள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் உள்ளது.

கிராமப் புறங்களில் இந்த ஓய்வூதிய திட்டங்கள் பெரிய அளவில் சென்றடையவில்லை. ஒய்வூதியம் குறித்த விழிப்புணர்வு, நிதி அறிவு குறைவாக இருப்பது மற்றும் திட்டங்கள் பெரிதும் அவர்களை சென்றடையாமல் இருப்பதே இதற்குக் காரணம்.டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாகவும், வங்கிகள் மூலமாக கிரமங்களுக்கு திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2024-25ம் நிதியாண்டில் முதலீட்டு சந்தை மதிப்பை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 லட்சம் புதிய தனியார் நிறுவன பணியாளர்களை திட்டத்துக்குள் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பெண்கள் ஓய்வுதிய திட்டங்களில் இணைவது குறைவாக இருக்கிறது. ஓய்வூதியம் என்பது பெண்களுக்கு தான் மிகவும் அவசியமானது. இந்திய அளவில் 25 சதவீத பெண்கள் மட்டுமே இணைந்துள்ளனர்.ஆனால், தமிழகத்தில் 33 சதவீத பெண்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அடுத்த காலாண்டில் சமச்சீர் வாழ்க்கை சுழற்சி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் முதல் சுழற்சியில் அதிக முதலீடு செலுத்தி பின்னர் படிப்படியாக முதலீடுகளை குறைக்கலாம். இந்த திட்டத்தில் காப்பீட்டாளருக்கு அதிக பயண் கிடைக்கும்.மேலும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 1.50 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE