விஷவாயு கசிவு சம்பவத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: புதுச்சேரி ஆளுநர் உறுதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: விஷவாயு கசிவு பிரச்சினையில் தவறிழைத்த அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி உழவர்கரை நகராட்சிப் பகுதியிலுள்ள ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டு கழிப்பறைகளில் நைட்ரஜன் சல்பேட் விஷவாயு கசிவு ஏற்பட்டு பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். பலர் மயக்கமடைந்து சிகிச்சை பெற்றனர். புதுநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளில் புதைசாக்கடை குழாய் இணைப்புப் பணிகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுநகர் பகுதியை துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மாலை நேரில் பார்வையிட்டார். அவருக்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆட்சியர் குலோத்துங்கன், தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்டோர் விளக்கினர். உயிரிழந்தோர் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை வாங்கி நீண்ட நேரம் பார்த்தபடி இருந்தார். அருகே இருந்த உயிரிழந்த பெண்களின் வீட்டாருக்கும் சென்று ஆறுதல் கூறினார்.

ஆய்வுக்குப் பின் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்கள் நலனே முக்கியமாகும். ஆகவே புதுநகர் விஷவாயு கசிவு குறித்து அனைத்துத் தரப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் இன்று இரவு நடத்தப்பட்டு, விஷவாயு கசிவால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் போல மறுபடியும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான செயல்திட்டம் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களிடம் வழங்கப்படும். நம்மிடம் உள்ள அதிகாரிகள் பெரிய நகரங்களில் பணியாற்றிவர்கள். ஆய்வுக்கூட்டத்தின் விவாதிக்கும்போது, பெரிய நிபுணர்கள் வேண்டும் என்றால் வரவழைக்கப்படுவார்கள். புதுநகர் பகுதியில் தற்போதுள்ள பாதாள சாக்கடைக்கு இணையாக புதிய குழாய் அமைக்கப்படும்.

சுத்திகரிப்பு நிலையத்தை திடீரென மாற்றமுடியாது என்பதால், அதை தொலைநோக்குத் திட்டமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் கழிவு நீர் குழாய் இணைப்பு முறையாக இல்லாததே விஷவாயு கசிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆகவே, தற்போது அரசு இந்த இணைப்பை முறையாக அமைத்துத் தருகிறது.

விஷவாயு கசிவுப் பிரச்னையில் தவறு செய்திருந்தால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர் என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். புதை சாக்கடையில் மருத்துவமனை, தொழிற்சாலை கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்கள் கழிவுநீரை முறையாக சுத்தப்படுத்தியே வெளியேற்றவேண்டும். விஷ வாயுக்கசிவால் எந்தப் பகுதியில் பாதிப்பு இருந்தாலும் உடனே சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இதுபோன்ற விபத்து எங்கும் நடக்காத வகையில் அணுகுமுறை இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE