புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் வீடுதோறும் கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் மும்முரம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் புதுநகரில் வீடு தோறும் கழிவுநீர் இணைப்புத் தொட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஏராளமான தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களுக்குள் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்றும் இரு பெண்களுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் நைட்ரஜன் சல்பேட் விஷவாயு பரவி 3 பெண்கள் உயிரிழந்தனர். பாதாள சாக்கடையுடன் வீட்டு கழிவு நீர் குழாய்களை நேரடியாக பல வீடுகளில் இணைத்துள்ளனர். அப்படி இணைக்கப்பட்ட வீடுகளில் காற்று வெளியேறும் வகையில் கழிவுநீர் இணைப்புத் தொட்டி அமைக்கவில்லை. நேரடியாகவே இணைத்திருந்ததால்தான் வீட்டுக்கழிவறைக்குள் விஷவாயு பரவியது.

இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு கழிவுநீர் குழாய்களை இணைப்புத்தொட்டி அமைக்க அரசு முடிவு எடுத்தது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக புதுநகர் நான்காவது தெருவில் அனைத்து வீடுகளிலும் கழிவுநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டது. அதனால் யாரும் கழிவறை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இப்பகுதி மக்கள் கம்பன் நகரிலுள்ள அரசு பள்ளியில் தங்க செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் கம்பன் நகர் சுப்பையா அரசு பள்ளிக்கு சென்று தங்கினர். அதனால் இப்பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. வகுப்பறையில் பொதுமக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வருவாய்துறை மூலம் உணவு தரப்படுகிறது. 3 நாட்களுக்குள் இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புத்தொட்டி அமைக்க ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். இதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இணைப்புத்தொட்டி அமைக்கும் பணி துரித வேகத்தில் நடக்கிறது.

நான்காவது தெருவிலுள்ள அனைத்து வீடுகளிலும் முதல்கட்டமாக உடன் இணைப்புத்தொட்டி அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அடுத்த தெருக்களிலும் பள்ளம் தோண்டும் பணியும் நடந்து வருகிறது. சுமார் 400 வீடுகளுக்கு பழைய கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு புதிதாக முறையான இணைப்பு வழங்கும் பணிகள் நடக்கிறது.

அப்பகுதியில் கழிவுநீர் அடைப்பை சீர்படுத்தும் இரு நவீன இயந்திர வாகனங்களும் இயக்கப்பட்டு புதை சாக்கடை அடைப்பும் சீர்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில் சுகாதாரத் துறையால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமிற்கு தலைச்சுற்றல் காரணமாக புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்த சங்கீதா (30), மங்கையர்கரசி (40) ஆகிய இரு பெண்கள் இன்று வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE