“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எஸ்ஆர்எம் ஹோட்டலை மூட முயற்சி” - திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்

By துரை விஜயராஜ்

சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்ஆர்எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எஸ்ஆர்எம். ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காகப், பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான இடத்தை, 1994-ம் ஆண்டு முறையாக குத்தகை பெற்று, சுமார் 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வரும் எஸ்ஆர்எம். குழுமத்தினை, உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. எஸ்ஆர்எம். நிறுவனம், குத்தகைக் காலத்தை நீட்டிக்கக் கோரி மூன்று முறை மனு அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறது திமுக அரசு. எனவே, இது தொடர்பாக எஸ்ஆர்எம். குழுமம் நீதிமன்றத்திடம் முறையிட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கையில், திமுக அரசு உள்நோக்கத்தோடு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

திமுக ஆட்சியில், அதன் நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவது வாடிக்கையானது. காலகாலமாக, நில ஆக்கிரமிப்புகளும், கட்டப்பஞ்சாயத்தும், அத்துமீறல்களும், திமுக ஆட்சியின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகின்றன. அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களைப் பழிவாங்குவது திமுகவுக்கு வழக்கமானது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் மண்டபத்தை இடித்துப் பழி தீர்த்துக் கொண்ட திமுக, இன்றும் திருந்தவில்லை என்பதையே தற்போது திருச்சி எஸ்ஆர்எம். ஹோட்டலைக் கைப்பற்ற நடக்கும் முயற்சி நிரூபிக்கிறது.

சாமானிய பொதுமக்கள், நீதிமன்றம் மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல நடந்து கொள்ளும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கு நிலுவையில் இருக்கையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE