புதுச்சேரி: கழிவறைக்குச் சென்ற தம்பதிக்கு மூச்சுத் திணறல்; இருவரும் மருத்துவமனையில் அனுமதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மற்றொரு பகுதியான சாரத்தில் கழிவறைக்குச் சென்ற கணவன், மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் விஷவாயு பரவி 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் புதுவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கழிவறை வழியாக விஷவாயு பரவியதால் மக்கள் தற்போது கழிவறைக்கு செல்வதற்கே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரி, சாரம் தொகுதிக்குட்பட்ட சுந்தமேஸ்திரி வீதியிலும் கணவன் - மனைவிக்கு இன்று (வெள்ளிக்ழமை) மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (67). இவரது மனைவி பவானி (63). இன்று தங்களது வீட்டினுள் உள்ள கழிவறைக்கு பவானி சென்றுள்ளார். அப்போது அவருக்கு கண் எரிச்சல் மற்றும் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனது கணவர் பழனியை உதவிக்கு அழைத்தபோது அவருக்கும் அதே உணர்வு இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் இருவரும் சகஜ நிலைக்கு திரும்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கழிவறையில் இருந்து விஷவாயு வந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என சோதனை நடத்தினர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினரும், வருவாய் துறையினரும் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE