உதகை: 150 ஆண்டுகளை கடந்த பழமையான உதகை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர தகுதி வாய்ந்ததா என கேள்வி எழுந்துள்ளது. பழமையான இந்த நகராட்சி தன்னிறைவு பெறாமல் நிதி நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உதகை நகராட்சி 1866-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் மதராஸை அடுத்து உருவாக்கப்பட்டது என்ற பெருமை உதகை நகராட்சிக்கு உள்ளது. 1894-ம் ஆண்டு உதகை நகராட்சி கட்டிடம் கட்டப்பட்டது, பின்னர் 1946-ம் ஆண்டு நகராட்சி கட்டிடம் விரிவாக்கப்பட்டது. நகராட்சியின் முதல் தலைவராக எம்.கிருஷ்ணசாமியும், முதல் ஆணையராக கே.ராமசாமியும் இருந்தனர். உதகை நகராட்சியின் தலைவர் மற்றும் ஆணையர் பொறுப்பு வகிப்பது பெருமையாக கருதப்பட்டது.
இந்த நகராட்சி தொடங்கப்பட்டு 158 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்த நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அரசுக்கு பரிந்துரைக்க முழு வீச்சில் நகராட்சி நிர்வாகம் செயலாற்றி வருகிறது. இந்நிலையில், உதகை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த தகுதி வாய்ந்தது தானா என கேள்வி எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான உதகை நகராட்சி 36 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக 1987-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 30.67 சதுர கிலோ மீட்டர். தற்போதைய மக்கள் தொகை ஒரு லட்சத்து 23 ஆயிரம். இந்த நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் அருகில் உள்ள கேத்தி பேரூராட்சி மற்றும் தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார், உல்லத்தி ஆகிய ஊராட்சிகள் உதகை நகராட்சியுடன் ஒன்றிணைக்கப்படும். இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மக்கள் கூறும்போது, ‘‘சுமார் 1.5 லட்சம் உள்ளூர் மக்களின் தேவைகள் மட்டுமின்றி, ஒவ்வோர் ஆண்டும் இங்கு வரும் 25 லட்சம் சுற்றுலா பயணிகளின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இந்த நகராட்சிக்கு உள்ளது. 158 ஆண்டுகளைக் கடந்தும் உதகை நகராட்சி தன்னிறைவு பெறாமல், நிதி நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. இதனால் நகராட்சியால் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியவில்லை.
அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் கூட நிறைவேறவில்லை என்பது தான் வேதனை. சுற்றுலாவுக்கான எவ்வித உள்கட்டமைப்புகளும் இல்லை. இந்நிலையில், அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டால், சமவெளிப் பகுதிகளை விட வித்தியாசமான நிலப்பரப்பை கொண்ட உதகையிலிருந்து பல கி.மீ., தூரம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது தேவைகளுக்காக உதகை வரவேண்டும்.
மேலும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், வரி விகிதங்கள் உயர்த்தப்படும். பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாவட்டமானநீலகிரியில் மக்களின் வருவாய் குறைவாகும். இதனால், மீண்டும் வரி உயர்வு மக்கள் மீது கடும் சுமையை ஏற்றிவிடும்” என்றனர்.
நகராட்சி துணை தலைவர் ஜே.ரவிகுமார் கூறும்போது, ‘‘நகராட்சியின் வருவாய் அதிகரித்துள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. உதகை நகராட்சி, பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட 158 ஆண்டுகள் பழமையான நகராட்சி ஆகும். பல நகராட்சிகள் 9 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து, உதகை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அரசு மேம்பாட்டுத் திட்டங்கள் ஒதுக்கீடு கிடைக்கப்பெறும்” என்றார்.
நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறும்போது, ‘‘உதகை கடந்த 1987-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 37 ஆண்டுகளான நிலையில், மாநகராட்சியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உதகை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், உதகை நகராட்சி உடன் இணைக்கப்படும் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை மேம்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வாழ்வாதாரம் மேம்படும்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம், விவசாயம், தேயிலை உற்பத்தி ஆகிய தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும். விசாலமான சாலைகள், பார்க்கிங் வசதிகள் போன்றவை மாநகராட்சி தரத்துடன் நடைபாதைகள், வாகன பார்க்கிங் வசதிகள் கிடைக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago