திருச்சியில் எஸ்ஆர்எம் ஹோட்டலை கையகப்படுத்த போலீஸுடன் வந்த சுற்றுலா துறை - குத்தகை முடிவால் நடவடிக்கை

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்எம் ஹோட்டல் அரசுக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில் குத்தகை காலம் முடிந்ததால் இடத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தையொட்டி எஸ்ஆர்எம் ஹோட்டல் வளாகம் அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த 1994-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

ஆரம்பத்தில் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வீதம் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரால் சந்தை மதிப்பு அடிப்படையில் ஏழு சதவீதம் ஆண்டு குத்தகை தொகை உயர்த்தி நிர்ணயம் செய்யவும் ஒப்பந்தமானது. குத்தகை தொகை தொடர்பாக எஸ்ஆர்எம் குழுத்துக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கும் இடையே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்று வந்தது.

அந்த வழக்கில், உரிய தொகையை செலுத்த எஸ்ஆர்எம் குழுமத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், குத்தகை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குத்தகை காலம் நிறைவடைந்ததாக நேற்று மாலை ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக திருச்சி மண்டல மேலாளர் (பொறுப்பு) என்.டேவிட் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஹோட்டலை கையகப்படுத்துவதற்காக இன்று (வெள்ளி கிழமை) காலை ஹோட்டலுக்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த எஸ்ஆர்எம் குழும இயக்குநர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் சேனாபிரசாத் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “எந்தவிதமான நோட்டீஸும் அளிக்காமல் உடனடியாக காலி செய்ய சொல்வது சட்டப்படி தவறு” என்று ஹோட்டல் தரப்பில் வாதிட்டனர். மேலும், “தஞ்சையில் உள்ள சங்கம் ஹோட்டலும் இதேபோல் தான் குத்தகை காலம் நிறைவடைந்துள்ளது.

அங்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எங்கள் குழும ஹோட்டல் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, அரசு தரப்பில் ஏற்கெனவே முறையான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஹோட்டலை அளவிடும் பணியில் சுற்றுலாத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹோட்டல் உள்ளே யாரையும் உள்ளே அனுமதிக்காமல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் பாரிவேந்தர் ஆதவாளர்கள் ஹோட்டல் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே, பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஹோட்டல் வாசலில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளே நுழைந்தனர். இது தொடர்பாக எஸ்ஆர்எம் குழும இயக்குனர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் சேனா பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 30 வருடங்களாக இதே இடத்தில் ஹோட்டல் இயங்கி வருகிறது.

இது சுமார் 100 அறைகள், 8 விழா அரங்குகள், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குத்தகை காலம் 13.6.2024 அன்றுடன் முடிவடைந்தது. ஒப்புக்கொண்ட வாடகையை உடனடியாக செலுத்தி வருகிறோம்.

ஹோட்டல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கும் பிறகு தான் செயல்பாட்டுக்கு வந்தது. அத்துடன் தொடக்கத்திலிருந்தே இந்த ஹோட்டல் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்திய அனைத்து கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் பல்வேறு காரணங்களுக்காக குத்தகைக் காலத்தை நீட்டிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

குத்தகை நீட்டிப்பு குறித்து வாய்மொழியாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உறுதியளித்ததாலும், எங்கள் சட்ட ஆலோசகர், சிவில் வழக்கை தாக்கல் செய்யும்படி எங்களுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் திருச்சி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இதன் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கும் வழங்கப்பட்டது.

ஜூன் 10-ம் தேதி, இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அதில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளும் ஆஜராயினர். எனவே, இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கையில் உள்ளது. மேலும், குத்தகையை ரத்து செய்ய கட்டாயத் தடை விதிக்கக் கோரியும், எங்களை வெளியேற்ற வற்புறுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் ஜூன் 5-ம் தேதி திருச்சி சப்கோர்ட்டில் மற்றொரு வழக்கும் தொடர்ந்துள்ளோம்.

இந்த விவகாரம் சட்டபூர்வ நடைமுறையில் இருக்கும் போது, ​​இன்று திடீரென சட்ட விரோதமான முறையில் ஹோட்டலை கையகப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் எங்கள் வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். எங்கள் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் அண்மையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால் முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இன்றுவரை எங்களை காலி செய்ய எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. எந்த நீதிமன்றத்திலும் எந்த உத்தரவும் இல்லாமல், அதிகாரிகள் எந்த ஒரு உத்தரவையும் கொடுக்காமல், தவறான முறையில் கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்” என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன் பேசுகையில், “ஹோட்டல் நடத்துவதற்கான ஒப்பந்த காலம் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. எனவே அனைவரும் வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளோம். இந்த நிறுவனம் அரசுக்கு ரூ. 40 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டி உள்ளது. ஒப்பந்த காலம் நிறைவடைகிறது என்பதை நினைவூட்டி பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

இன்று பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிடும் என எஸ்ஆர்எம் ஹோட்டல் தரப்பில் வாதிடப்பட்டது. அதுவரை காத்திருக்க இயலாது என கூறிவிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஹோட்டலில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தையொட்டி எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் வளாகம் அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்