புதுச்சேரியில் 32,000 பதிவு, அனுமதி பெறாத கழிவுநீர் இணைப்புகள்: பொதுப்பணித் துறை கவனிக்குமா?

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் கழிவறை விஷவாயு சம்பவத்தை அடுத்து அரசு தரப்பில் விசாரித்தபோது புதுவை
அரசிடம் பதிவு பெற்ற 34 ஆயிரம் கழிவு நீர் இணைப்புகள் தான் உள்ளன. மேலும் 32 ஆயிரம் பதிவு பெறாத மற்றும் அனுமதி பெறாத இணைப்புகள் உள்ளன எனக் குறிப்பிட்டனர். இதில் பொதுப்பணித் துறை இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுகிறது.

கடந்த 11-ம் தேதியன்று ரெட்டியார்பாளையம் புதுநகர் நான்காவது குறுக்கு வீதியில் உள்ள வீடுகளின் கழிவறைகளில் இருந்து வெளியேறிய நைட்ரஜன் சல்பேட் விஷவாயுவால் 3பேர் உயிரிழந்தனர்.

பொதுப்பணித்துறையின் மோசமான செயல்பாடே இதற்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர். இதர பகுதிகளில் கழிவுநீர் இணைப்பு சரியாக உள்ளதா என விசாரித்த போது, இதுவரை அரசிடம் பதிவு பெற்ற 34 ஆயிரம் கழிவு நீர் இணைப்புகள் தான் உள்ளன. மேலும் 32 ஆயிரம் பதிவு பெறாத அனுமதி பெறாத இணைப்புகள் உள்ளன என தெரிய வந்திருக்கிறது. இந்த கழிவு நீர் இணைப்பு வேலைகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகவுள்ளது. ரெட்டியார்பாளையம் புது நகரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்தனர். இதுபோல் சம்பவம் நடக்காமல் தடுக்க பொதுப்பணித்துறை சரியான விழிப்புணர்வோ நடவடிக்கையோ எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விஷவாயு கழிவறையில் வராமல் தடுப்பது பற்றி பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் கேட்டதற்கு" இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தங்கள் வீடுகளில் கழிவு நீர் இணைப்பை பாதாள சாக்கடை குழாயில் செப்டிக் டேங்க்கோடு நேரடியாக இணைத்து இருந்தால் அதை துண்டித்து இணைப்பை மாற்றி கழிவறைக்கும் பாதாள சாக்கடை குழாயில் நேரடியாக இணைப்பதற்கு முன் நடுவில் சிறிய சோதனை தொட்டி (INSPECTION CHAMBER) அமைக்க வேண்டும்.

கழிவறை கோப்பையை எந்த விதத்திலும் செப்டிக் டேங்கின் மேல் அமைக்க கூடாது. கழிவறை கோப்பையின் அடிப்பாகத்தில் ‘S’ வடிவு அல்லது ‘P’ வடிவு டிராப்பை பொருத்த வேண்டும். இப்படி பொருத்தினால், டிராப்பில் தண்ணீர் தடுப்பு (WATER SEAL) இருப்பதினால் விஷவாயு கழிவறையில் புகாது. இந்த இணைப்பை அரசு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் அரசு அங்கீகரித்த முறையில் தான் மாற்றி அமைக்கவேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE