நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க முயல்வது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘‘சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.

மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.

மத்திய அரசின் திறமையின்மை யையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றியஅவர்களின் அக்கறையின்மை யையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வில் குழப்பங்களும், குளறுபடிகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு 67 பேர் முதல்மதிப்பெண் பெற்றதற்கும், பலர் 718,719, 716 போன்ற மதிப்பெண்கள் பெற்றதற்கும், காரணம் கருணை மதிப்பெண்கள் தரப்பட்டது என தேசிய தேர்வு முகமை சொல்கிறது. நீட் தேர்வில் நேர பற்றாக்குறைக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று எந்த தீர்ப்பிலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், 2018-ம் ஆண்டு பொதுவான சட்ட நுழைவுத் தேர்வுக்கு கொடுத்த தீர்ப்பை, நீட் தேர்வுக்கும் பொருந்தும் என அவர்களாகவே நினைத்துக் கொண்டு, தேசியதேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கி உள்ளது. இது நீட் தேர்வுக்கான தீர்ப்பே இல்லை. எனவே இது மிகப்பெரிய மோசடி.2 மணிக்கு உள்ளே தேர்வு அறைக்குள் அனுப்பப்படும் மாணவர்கள் 5.20 மணிக்கு வெளியே அனுப் பப்படுகிறார்கள்.

மேலும், நேரம் கடந்து வருபவர்களை தேர்வுக்கூடத்துக்கு உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்கள். இப்படி இருக்கும்போது மாணவர்களுக்கு எப்படி நேரப் பற்றாக்குறை இருக்க முடியும். அந்தவகையில், கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்து மட்டும் 8 பேர், முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள். அதில் 6 பேர்720-க்கு 720 மதிப்பெண்ணும், மீதம் 2 பேர் 718, 719 மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் ஆகும்.

பொதுவான சட்ட நுழைவுத் தேர்வுக்கான உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியிருப்பது, ஒட்டுமொத்த இந்தியமாணவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதியாகும்.

தமிழகத்தில் எந்த மாணவருக்கும் கருணை மதிப்பெண் வழங்கப்படவில்லை. தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி தமிழக அரசு நீதிமன்றத்தை நாடாது. கருணை மதிப்பெண் மீதான குழப்பத்துக்கு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடருவதாக இருந்தோம். ஆனால், இதுதொடர்பான தீர்ப்பு வந்துவிட்டது. அதனால், நீதிமன்றம் செல்ல அவசியம் இல்லை. ஆனால், தேசிய மருத்துவ முகமை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE