பாஜக மாநில பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி பாஜக மாநில பொதுச்செயலாலர் முருகானந்தம், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை டாடா பாத் அருகேயுள்ள பி.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஏ.பி.முருகானந்தம். இவர் பாஜக மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். இந்நிலையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று (ஜூன் 13) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். மேலும், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணனை சந்தித்து முருகானந்தம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "கிருஷ்ணகிரி அருகே, நடுசாலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப் படத்தை ஆட்டுக்கு அணிவித்து, அந்த ஆட்டின் தலையை சிலர் வெட்டினர். இவ்விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை கடந்த 7-ம் தேதி தனது முகநூல் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். அதற்கு தேவராஜ் என்ற பெயரில் உள்ள முகநூல் சமூகவலைதள பக்கத்தின் வாயிலாக ஒருவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், தனது கழுத்தை துண்டாக வெட்டி என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி, முகநூல் ஐடி வாயிலாக அந்நபர் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த தேவராஜ் என்ற பெயரில் உள்ள முகநூல் ஐடியை இயக்கி வரும் நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம் கூறியது: "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு மக்கள் சேவைக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தேர்தல் காழ்புணர்ச்சி காரணமாக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சைப் படுத்தி, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. நடுசாலையில் ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை போட்டு வெட்டி, மாநில தலைவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். திமுக அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு கொலை மிரட்டல் விட்ட நபர் யார், அரசியல் காரணங்கள் இருக்கின்றதா என விசாரிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா - பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இடையே நடந்த பேச்சு கண்டிப்பு என சொல்ல முடியாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி இருக்கலாம்’’என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE