ஜி-பே, ஃபோன்பேவில் ரூ.100-க்கு ரூ.10 கமிஷன் - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையம் இல்லாததால் இந்நிலை!

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் புதிய பேருந்து நிலையம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் அங்கு ஏடிஎம் மையம் இல்லாததால் வெளியூர் பயணிகள் அவசர பணத் தேவைக்காக அங்குள்ள தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளின் உரிமையாளர்களிடம் ஜி-பே, ஃபோன்-பே மூலம் கமிஷனுக்கு பணம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் சுமார் ரூ.970 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து 5-வது ஆண்டாக நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் குளறுபடிகளில் இரண்டாமிடத்தில் இருப்பது வேலூர் புதிய பேருந்து நிலையம். ரூ.53 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வெளி மாவட்ட பயணிகள் மத்தியில் முகம் சுழிக்க வைக்கிறது. வேலூர் புதிய பேருந்து நிலையத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலைய கட்டுமானத்துக்கு ரூ.53 கோடியா? என்ற கேள்விதான் பெரும்பாலானவர்கள் மத்தியில் இருந்து வந்தது. 9.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய பேருந்து நிலையத்தில் 3,187 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கட்டுமானம் முடிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 84 பேருந்துகளை நிறுத்தி வைக்க முடியும். பயணிகள் வசதிக்காக 82 கடைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலன கடைகள் ஏலம் விடுவதில் இருந்து வரும் தொடர் சிக்கல்களால் மூடியே கிடக்கின்றன.

3 உணவகங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. பயணிகள் அமருவதற்காக 11 இடங்களில் மொத்தம் 75 இருக்கைகளை அமைத்துள்ளனர். பேருந்து நிலையம் என்றால் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமாக இருப்பது மருந்து கடையும், ஏடிஎம் மையமும்தான். இந்த இரண்டையும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

குறிப்பாக, ஏடிஎம் மையம் இல்லாததால் பணம் இல்லாமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர். ஒரு கட்டத்தில் இதெல்லாம் ‘ஒரு பஸ் ஸ்டாண்டா’ என வசைபாடி செல்வதை தினசரி கேட்க முடிகிறது. வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையம் இல்லாததை தங்களுக்கு சாதகமாக சில தற்காலிக கடைகளின் உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்.

வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கு வெளியே உள் வாடகை கொடுத்துவிட்டு பயணிகள் பாதையை ஆக்கிரமித்துள்ள தற்காலிக கடைகளில் கமிஷனுக்கு ஜி-பே, ஃபோன்-பே செயலி வழியாக பணத்தை அனுப்பி ரொக்கமாக மாற்றிக் கொடுக்கின்றனர். அவசர பணத்தேவை இருக்கும் பயணிகளுக்கு 100 ரூபாய்க்கு 10 ரூபாய் கமிஷன் வீதம் கொடுத்துவிட்டு எரிச்சலுடன் கடந்து செல்கின்றனர்.

எங்கிருக்கிறது ஏடிஎம் மையம்: வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரே ஒரு தனியார் ஏடிஎம் மையம் உள்ளது, அங்கு பெரும்பாலும் பணம் இருப்பதே இல்லை. அதை விட்டால் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள அடுக்குமாடி முதல் தளத்தில் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த இரண்டு ஏடிஎம் மையமும் உள்ளூரைச் சேர்ந்த பலருக்கே தெரிவதில்லை. இதில், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் 500 ரூபாய் பணம் எடுக்க சுற்றி, சுற்றி வருவதைப் பார்க்க முடிகிறது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என தகவல் பரவியதும் மொத்த அரசு நிர்வாகம் அதிரடி காட்டி பயணிகள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து பிரச்சினைகளை சரி செய்தனர். ஆனால், வேலூர் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் தினசரி படும் இன்னல்களுக்கு தீர்வு காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டதற்கு, ‘‘வரும் மாநகராட்சி கூட்டத்தில் ஏடிஎம் மையம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE