குவைத் தீ விபத்தில் உயிரிழந்த செஞ்சி இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர வேண்டுகோள்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குவைத் நாட்டின் மகாஃப் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப் கடந்த 14 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள மெட்டீரியல் ஸ்டீல் சில்வர் கம்பெனியில் ஃபோர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். அவரும் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் ஷெரீப், குவைத் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படம் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அது முகமது ஷெரீப்பின் புகைப்படம் அல்ல என மறுப்புத் தெரிவித்தனர். இதற்கிடையே, ஷெரீப் தங்கி இருந்த இடத்திலேயே உடல் கருகி இறந்துபோனார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தச் செய்தியைக் கேட்டு ஷெரீப்பின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஷெரீப்பின் உடலை உடனடியாக செஞ்சிக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE