சர்வதேச யோகா தினம் | தமிழகம் முழுவதும் கொண்டாட பாஜகவில் 8 பேர் குழு நியமனம்

By துரை விஜயராஜ்

சென்னை: சர்வதேச யோகா தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவடைந்து 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். கடந்த 2 மாதங்களாக தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த பாஜகவினர் தற்போது கட்சி பணிகளை கவனிக்கத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட தமிழக பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, பாஜக சார்பில் நடத்தப்படும் யோகா தின விழாவில் அதிகளவில் பெண்களை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் பாஜக நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று அனைத்து மண்டலங்களிலும் குறைந்தது ஒரு இடத்திலாவது மிக சிறப்பான முறையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்கும் வகையில் யோகா தினத்தை நடத்த வேண்டும். சமூக அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், ரசிகர் மன்றங்கள் போன்ற பல்வேறு விதமான அமைப்புகளை இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும். குறிப்பாக, இதில் அதிகமாக பெண்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும்.

வந்தே மாதரத்துடன் தொடங்கி, தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெற வேண்டும். யோகா, கலை, ஆரோக்கியம், மன அமைதி, சேவை, நாட்டு நலன், சுத்தம், சுகாதாரம் இவைகளை எல்லாம் பற்றி ஒரு சிறு உரையுடன் நிறைவு செய்வதோடு, தினமும் யோகா செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேச வேண்டும். மாநில அளவில் ஏற்படுத்திய குழுவோடு மாவட்ட அளவில் 5 பேர் கொண்ட குழுவும், மண்டல அளவில் 3 பேர் கொண்ட குழுவும் அமைக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, பாஜக சார்பில் மாவட்டம் மற்றும் மண்டலம் அளவில் யோகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும், சிறப்பான முறையில் வழிநடத்துவதற்கும் ஒருங்கிணைப்பு குழுவை மாநில தலைவர் அண்ணா நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யோகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் மாநில செயலாளர் ஆர்.ஆனந்தப் பிரியா, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், இளைஞரணி மாநில தலைவர் எம்.ரமேஷ் சிவா, மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் மோகனப் பிரியா சரவணன், கல்வியாளர் பிரிவு மாநில அமைப்பாளர் தங்க கணேசன், ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் வீர திருநாவுக்கரசு, சமூக ஊடகப் பிரிவு மாநில துணை தலைவர் கார்த்திக் கோபிநாத், எஸ்சி அணி மாநில துணை தலைவர் பி.சம்பத்ராஜ் ஆகிய 8 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE