சென்னையில் 5 மணி நேரம் தாமதமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்: சிங்கப்பூர் செல்லும் 186 பயணிகள் அவதி

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னை- சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம் ஆனதால், 186 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதிப்பட்டனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இந்த விமானத்தில் 186 பயணிகள், பயணிக்க இருந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று இரவு 10:30 மணிக்கு எல்லாம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து விதமான சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வழக்கமாக நள்ளிரவு 11.50 மணிக்கு, சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துவிட்டது. ஆனால் அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது அதை சரி செய்த பின்பு விமானத்தை இயக்கவும் என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டார். இதையடுத்து இன்று அதிகாலை 1.40 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் 186 பேரும் விமானத்தில் ஏற்றாமல், ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள், அவ்வப்போது விமான அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, இன்று காலையில் சரி செய்யப்பட்டது. அதன் பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இதை அடுத்து அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 5 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, இன்று காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. எதிர்பாராத இந்த தாமதத்தால் 186 பயணிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளானார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE