மருத்துவ காரணத்துக்காக சவுக்கு சங்கர் இடைக்கால நிவாரணம் கோரினால் 8 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால நிவாரணம் கோரி சவுக்கு சங்கர் மனு அளித்தால், தமிழக அரசு அதை 8 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள், பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ‘சவுக்கு’ யூ-டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை போலீஸார் கடந்த மே 4-ம் தேதி கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மே 12-ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர்.

இதையடுத்து, அந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், காவல் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வேறொரு இரு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:

போலீஸார் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக்: இதுதொடர்பாக கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்.

நீதிபதிகள்: வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, உரிய வரிசைப்படியே இந்த வழக்கு விசாரிக்கப்படும். ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகே, இந்த மனு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன்: சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சைதேவைப்படுவதாலும், பிற காரணங்களுக்காகவும் இடைக்கால நிவாரணமாக அவரை தற்காலிகமாக விடுவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு தரப்பு: தற்போதைய சூழலில் அவரை விடுவிக்க இயலாது. இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, மனுதாரர் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த மனுவை தமிழக அரசு 8 வாரங்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசார ணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE