கோவையில் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர்கள் ஆய்வு

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்தனர்.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையொட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு திமுகவை வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகியவை கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடக்கிறது.

இவ்விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், திமுக அமைச்சர்கள், வெற்றி பெற்ற எம்.பிக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த முப்பெரும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள், கொடிசியா மைதானத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு தீவிரப்படுத்தினர். மேடை, பந்தல்கள்,பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை விரைவாக அமைக்க அவர்கள் வலியுறுத்தினர்.

உதயநிதி ஸ்டாலின் வருகை: இதற்கிடையே, திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆற்றிய கழகப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மண்டலம் வாரியாக திமுகவினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கோவை அவிநாசி சாலை, சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் வரும் 14-ம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை வகித்து பேச உள்ளார்.

அதேபோல், அன்றைய தினம் கொடிசியா மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்கிறார் என கட்சியினர் தெரிவித்தனர்.

படம் விளக்கம்: திமுக முப்பெரும் விழாவுக்கான மேடை, பந்தல்கள் அமைத்தல் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE