“இண்டியா கூட்டணியின் வெற்றி ஜனநாயகத்தின் பாதுகாப்பு கவசம்” - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: “மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்,” என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அண்ணா அறிவாலயத்தில் ஊடகத்தினருடனான சந்திப்பின்போது அவர்கள் என்னிடம், “நாற்பதுக்கு நாற்பது என்ற முழுமையான வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை” என்றனர். “நான் எதிர்பார்த்திருந்தேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். உறுதியாக நான் எதிர்பார்த்ததற்குக் காரணம், திமுகவின் தொண்டர்கள் நிச்சயம் இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையினால்தான். அதற்கேற்ற உழைப்பை வழங்கிய தொண்டர்கள் ஒவ்வொருவருக்குமான பாராட்டை உங்களில் ஒருவன் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் விழாதான் கோவை முப்பெரும்விழா. இது திமுக தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டுகின்ற விழா.

பாராட்டுக்குரியவர்கள் தொண்டர்கள். நன்றிக்குரியவர்கள் தமிழக மக்கள். ஓர் லட்சியக் கூட்டணியின் முழுமையான வெற்றிக்குத் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் அதன் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆற்றிய பணிகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வெற்றி பெற்ற திமுகவின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் ஏற்கெனவே செயலாற்றிவரும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பேசும்போது, தொண்டர்களாம் உங்களின் அயராத உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அந்தக் கையொலி என்பது இனி நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் திமுக குரல்களுக்கான அடிநாதம்.

‘மக்களிடம் செல்’ என்ற அண்ணாவின் சொல்லுக்கேற்ப திமுக தொண்டர்கள், தோழமைக் கட்சியினருடன் இணைந்து மக்களைச் சந்தித்து, கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசினால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதையும், கடந்த மூன்றாண்டுகளில் திராவிட மாடல் அரசினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயன் தரும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தி, மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கிடவும், அவரவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கவனித்து நிறைவேற்றிடவும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்.

மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்.

1957 பொதுத் தேர்தலில் பங்கேற்று மக்களவையில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்த திமுக, இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடமிருந்து உறுதிமொழியைப் பெற்றுத் தந்தது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தந்த அந்த உறுதிமொழிதான் இன்றளவிலும் இந்தி ஆதிக்கத்திலிருந்து பெரும்பான்மையான மாநிலங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.

1962-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில், ‘நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், மாநில உரிமைகளுக்கான வலிமையான முதல் குரல். அந்த ஒற்றைக் குரலின் தொடர்ச்சியாகத்தான் இன்று பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தும் உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இண்டியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.

தமிழகத்தில் நாம் பெற்றுள்ள வெற்றி, இண்டியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்துக்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது. மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் லாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதைக் கழகத்துக்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வெற்றி விழாக்கள் எதுவாக இருந்தாலும் அது வெறும் கூடிக் கலைவதற்கான நிகழ்வல்ல. ஒவ்வொரு நிகழ்வும் தொண்டர்களுக்கான பயிற்சி அரங்கம். அடுத்த களத்துக்கான ஆயத்தப் பணி. கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்துக்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவின் தலைமையிலான இண்டியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதுதான் தமிழக மக்கள் நமக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ். மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும்.

அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்