ஆயுத பூஜை விடுமுறை: 20 நிமிடங்களில் முடிந்த ரயில் டிக்கெட் முன்பதிவு

By எம். வேல்சங்கர்

சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு 20 நிமிடங்களில் முடிந்தது.

இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11-ம் தேதி வெள்ளிக் கிழமையும், அதற்கு மறுநாள் 12-ம் தேதி சனிக்கிழமை விஜய தசமியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். ரயில் டிக்கெட் முன்பதிவைப் பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது.

இதற்காக, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில், ஆயுத பூஜை விடுமுறைக்காக, அக்டோபர் 10-ம் தேதி வியாழக்கிழமை ஊருக்குப் புறப்பட்டுச் செல்வோர் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் செல்லும் முக்கிய விரைவு ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களில் முடிந்தது.

குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, முத்துநகர், பாண்டியன், அனந்தபுரி ஆகிய விரைவு ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு 20 நிமிடங்கள் முடிந்து காத்திருப்போர் பட்டியல் வரத் தொடங்கியது. அதிகபட்சமாக, சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 110 ஆக இருந்தது. இது தவிர, விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் மலைகோட்டை விரைவு ரயில், கோயம்புத்தூருக்கு செல்லும் நீலகிரி, சேரன் விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, அமர்ந்து செல்லும் வசதி கொண்ட ஆர்.ஏ.சி இடங்களுக்கு புக்கிங் நடைபெற்று வந்தது. டிக்கெட் முன்பதிவைப் பொறுத்தவரை, இணையதளம் மூலமாக 80 சதவீதம் டிக்கெட் முன்பதிவும், டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமாக 20 சதவீதம் டிக்கெட் முன்பதிவும் நடைபெற்றது. இன்று மாலைக்குள் முக்கிய விரைவு ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE