குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மேட்டூர் அணை இன்று(ஜூன் 12) திறக்கப்படாத நிலையில், நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ஆம் தேதியாகிய இன்று, நடப்பு குறுவை பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 14.08 டி.எம்.சியாக இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்க இது போதுமானது அல்ல.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது 90 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு குறைந்து 15,000 கன அடிக்கும் கூடுதலாக நீர்வரத்தும் இருந்தால் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது குறித்து சிந்திக்க முடியும்.

கர்நாடக அணைகளில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்றைய நிலவரப்படி 37.03 டி.எம்.சி மட்டும் தண்ணீர் இருப்பதாலும், கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளுக்கும் சேர்த்தே வினாடிக்கு 5468 கன அடி வீதம் தான் தண்ணீர் வருகிறது என்பதால் அங்கிருந்தும் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

ஜூன் மாதத் தொடக்கத்தில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டாலும் கூட, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளத்தின் வயநாடு, கர்நாடகத்தின் குடகு பகுதிகளில் பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. அங்கு அடுத்தமாத இறுதியில் தான் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படியே நடந்தால் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில் தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமாகும். அதுவரை குறுவை சாகுபடியை தாமதிக்க முடியாது. அவ்வாறு தாமதித்தால், குறுவை பயிர்கள் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி சேதமாகும் ஆபத்துள்ளது.

அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான் சாத்தியமான, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு தமிழக அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டில் போதிய தண்ணீர் கிடைக்காததால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று போக பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. நடப்பாண்டிலாவது குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டால் தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பிலிருந்து விவசாயிகள் ஓரளவாவது மீண்டு வர முடியும்.

எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்ய தடையற்ற மின்சாரம் இன்றியமையாதது என்பதால், அனைத்துப் பகுதிகளுக்கும் வேளாண்மைக்காக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்