“தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தக் கூடாதென சொல்வது தவறு!” - செல்வப்பெருந்தகை ஆவேசம் 

By செய்திப்பிரிவு

சென்னை: “திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசினார்.

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசியது: “துணிந்து நின்றால்தான், நாம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட முடியும். அனைவரும் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகவில்லை என்ற கவலையுடன் இருக்கிறோம். காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

நம்மைப் போலவே, இந்த தேசத்தின் மக்களும் ராகுல் காந்திதான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், அவர் இன்று அரசியலைப் பார்க்கவில்லை. நான் உணர்ந்த வரை, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பார்வை ராகுல் காந்திக்கு இருந்தது. அதைத்தான் தீரப்பார்வை என்று கூறுவார்கள். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும், தூரப்பார்வையும் இருக்கிறது. கிட்டப்பார்வையும் இருக்கிறது.

இன்றைய அரசியலில், நான் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும், உள்ளாட்சிப் பிரதிநிதியாக வேண்டும் என்பதாகவே இருக்கிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்காக காங்கிரஸ் கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். உழைப்பவர்களுக்கும், இந்தக் கட்சியின் மீது விசுவாசமாக இருப்பவர்களு்ககு தகுந்த பொறுப்புகளை வழங்க வேண்டும். இதுதான், இன்றைக்கு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தேவையான ஒன்று. இந்த தேவையைப் பூர்த்தி செய்துவிட்டால், நாம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவோம். அடுத்த தலைமுறைக்கு காங்கிரஸ் பேரியக்கம் மிகப்பெரிய ஆயுதமாக இந்த பாசிசவாதிகளை எதிர்த்துப் போராடும்.

இனிவரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எது தேவையாக இருக்கிறது என்றால், உண்மை, ஒற்றுமை, உழைப்பு. ஒற்றுமை இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று நாம் ஆளுங்கட்சியாக கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் இருக்கிறோம். ஆனால், அங்கு தமிழகத்துக்கு நிகராக வெற்றி பெற முடியவில்லையே என்று பத்திரிகையாளர்கள் என்னிடத்தில் கேட்டனர். அதற்கு நான், தமிழகம் என்பது கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என அனைத்திலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எப்போதெல்லாம் இந்த தேசத்துக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் எழுந்து நிற்கும்.

இந்தத் தேர்தலில் தமிழகம் எழுந்து நின்றிருக்கிறது. அதுதான் நாற்பதற்கு, நாற்பது வெற்றி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நமக்கு எப்போதுமே மதிப்பும், அன்பும், மரியாதையும் உண்டு. அவருடைய உழைப்பு, நேர்மை. தேர்தல் காலத்தில் எந்தெந்த தொகுதிகளில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று 10 நிமிடம் விவாதிக்காமல் அவர் இருந்ததே இல்லை. அனைத்து தொகுதிகளையும் கண்காணித்துக் கொண்டே இருந்தார். திமுகவுக்கு எதிராக எது வந்தாலும், முதலில் எழுந்து சட்டப்பேரவையில் குரல் கொடுப்பது காங்கிரஸ் பேரியக்கம் தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

திமுகவை யாராவது தவறாக பேசினால், நான் குரல் கொடுப்பேன். காரணம், நாம் உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். அதுதான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி நமக்கு சொல்லிக் கொடுத்தது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு உண்மையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களுடைய கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். அதெல்லாம் வேறு.

ஆனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேறு. மற்ற கட்சிகளின் கொள்கை, கோட்பாடு வேறு. அதற்காக, நம்முடைய கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று சொன்னால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை. நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைக்கமாட்டோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், இணக்கமாக இருக்கிறோம் என்று பேசினால், அவர்கள் நம்மை ரசிப்பார்களா என்றால், ரசிக்கமாட்டார்கள்.

நமக்கென்று ஒரு கொள்கை, ஒரு பாதை என எல்லாமே இருக்கிறது. கூட்டணி என்பது வேறு. தேர்தல் காலங்களில் கூட்டணி வைக்கிறோம். பாசிசத்தை எதிர்க்கும்போது தைரியமாக எதிர்க்கிறோம் .தோழமைகளுடன் சேர்ந்து எதிர்க்கிறோம். நீட் தேர்வை திமுக எதிர்த்தால், காங்கிரஸ் கட்சியும் அந்த தேர்வை எதிர்க்கிறது. இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறோம். அது வேறு... இது வேறு. ஆனால், நம்முடைய கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். அதேபோல், வாக்கு வங்கியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்