புதுவையில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட மூவர் பலி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை (72). இவர் இன்று காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரது மகள் காமாட்சி (55), செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். இது குறித்து புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே செந்தாமரையும் காமாட்சியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி வீட்டில் கழிப்பறையில் இருந்து விஷவாயு வெளியேறிதால் 2 பேரும் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அந்தப் பகுதியில் விஷவாயு பரவுகிறதா என்பது குறித்து உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஷவாயு பரவியதால் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்பவரும் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை, போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் வாடிகாலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் வடிகாலை சரி செய்யும் வரை புதுநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டாம் என உழவர்கரை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE