ஆயுத பூஜை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூன் 11) தொடங்குகிறது.

நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக ரயில் போக்குவரத்து உள்ளது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் இதை விரும்புகின்றனர். இதனால், நாள்தோறும் ரயில்களில் முன்பதிவு, முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

இக்காலங்களில் நிம்மதியாக பயணிக்கும் விதமாக, 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமையும், அதற்கு மறுநாள் 12-ம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவுகளை முன்கூட்டியே மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

அதன்படி, ஆயுத பூஜை விடுமுறைக்காக, அக்.9-ம் தேதி புதன்கிழமை ஊருக்குப் புறப்பட்டுச் செல்வோர், செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். அக்.10-ம் தேதி வியாழக்கிழமை ஊருக்குப் புறப்பட்டுச் செல்வோர், வரும் 12-ம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.

ஆயுத பூஜை நாளான அக்.11-ம் தேதி ஊருக்கு செல்வோர், வரும் 13-ம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE