சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வான் போக்குவரத்தை மேம்படுத்தி ‘ஏர் டாக்சி’ வசதியை டிட்கோ செயல்படுத்த உள்ளது. சென்னையில் அடுத்த ஓராண்டுக்குள் ஹெலிகாப்டர் சேவையை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பேருந்து, மின்சாரரயில், மெட்ரோ ரயில் ஆகிய போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சொந்த வாகனம் வைத்திருப்பது கூடுதல் வசதி என்றாலும், சென்னையில் சாலைகள் விரிவடையாமல் இருப்பதால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
தற்போது சென்னை நகரப் பகுதியை தாண்டி புறநகர் பகுதிகளிலும், மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளிலும் குடியிருப்புகள் பெருகி, அங்கும் வாகன நெரிசலுக்கு வித்திட்டு வருகின்றன. இதனால், மக்கள் சிரமமின்றி பயணிக்க வேறு வழிகளை கண்டறிவது அவசியமாகிறது.
இதை கருத்தில் கொண்டுதான் ‘ஏர் டாக்சி’ வசதியை முதலில் சென்னைக்கும், பின்னர் மற்ற பகுதிகளுக்கும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) முன்னெடுத்துள்ளது.
நகர்ப்புற வான் போக்குவரத்து (யுஏஎம்) திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக டிட்கோ கடந்த வாரம் ஒரு கருத்தரங்கு நடத்தியது. ட்ரோன் மற்றும் குறுகிய தூரம் செல்லும் விமானங்களை இயக்கும் நிறுவனங்களை கொண்டு சென்னை பெருநகர பகுதிக்குள் பாதுகாப்பான வான் போக்குவரத்து வசதிகளை உருவாக்குவது குறித்து இந்த கருத்தரங்கில் பேசப்பட்டுள்ளது.
போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப பிரிவினர், வினாடா ஏரோமொபிலிடி நிறுவன பங்குதாரர்கள், சென்னை ஐஐடியின் ‘தி இபிளேன்’ நிறுவனம், சென்னை போக்குவரத்து காவல் துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA), விமான நிலைய ஆணையம், தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், மருத்துவ பணிகள் கழகம், சென்னை மாநகராட்சியின் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளின் சார்பில் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். அவர்கள் பேசியதாவது:
டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி: மாநகரில் நெரிசல் அதிகரிக்கும் சூழலில், போக்குவரத்து வசதியை அதிகரிக்க வேண்டி உள்ளது. மெட்ரோ மற்றும் சாலை போக்குவரத்தில் உயர்நிலை எட்டப்பட்டுவிட்டால், அடுத்ததாக சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கான அடுத்த தீர்வை கண்டறிய வேண்டியுள்ளது.
டிட்கோ திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி: பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து, நகர்ப்புற வான் போக்குவரத்து திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முதல் நகரமாக சென்னையை உருவாக்க முடியும். இதுபற்றிய கூட்டத்தில், வான் போக்குவரத்தில் பாதுகாப்பு, வழிமுறைகள், மேலாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தகவல் தொடர்பு, கண்காணிப்பு, விமானம் செலுத்துதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து, சென்னை பெருநகர பகுதிக்கான பாதுகாப்பான, நகர்ப்புற வான் போக்குவரத்து திட்டத்தை உருவாக்க ஆய்வு மேற்கொள்ள ஒத்துழைப்பு தருவதாக போயிங் நிறுவனம் சார்பில் இந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, நகர்ப்புற வான் போக்குவரத்து திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் அதற்கான வரைபடம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளைமேற்கொள்வது, தொடர்ந்து நகர்ப்புற வான் போக்குவரத்து திட்டத்தை படிப்படியாக செயல்படுத்துவது என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து டிட்கோ அதிகாரிகள் கூறும்போது, ‘‘நகர்ப்புற வான் போக்குவரத்து திட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போதுதான் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக, சென்னைக்குள் அடுத்த ஓராண்டுக்குள் ஹெலிகாப்டர் சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அடுத்ததாக, மற்ற நகரங்களுடன் இந்த சேவையை இணைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago