ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: புதுச்சேரியில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை உள்ளோர் வாக்களிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை உள்ளோர் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்குகளை இன்று (ஜூன் 9) பதிவு செய்தனர்.

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஐரோப்பிய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஐரோப்பிய குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு நேரடி உலகளாவிய வாக்குரிமை மூலம் ஒரே வாக்குச்சீட்டில், ஐந்தாண்டு காலத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக் கின்றனர். 2024 தேர்தல்களுக்காக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள 720 இடங்களில் (2019 இல் 705) பிரான்சுக்கு 81 இடங்கள் (2019 இல் 79) ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சு எம்பி-க்கள் உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை உள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6 முதல் 9 வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெறும். பிரான்சின் நிலப்பரப்பில் மற்றும் குறிப்பாக ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட பிரெஞ்சு குடிமக்களுக்கு, இன்று தேர்தல் துவங்கியது. வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு, வயது முதிர்ந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் நாட்டில் நேரில் வாக்களிக்கும் வாய்ப்பை பிரான்ஸ் வழங்குகிறது.

இன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4,546 பிரெஞ்சு குடிமக்கள் வாக்குப்பெட்டியில் வாக்களிக்க தகுதி உடையோர் என அறிவிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரியில் இரண்டு, சென்னையில் ஒன்று மற்றும் காரைக்காலில் ஒன்று என நான்கு இடங்களில் நான்கு வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு, 38 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்கின்றனர்.

பிரான்சின் துணை தூதர் லிஸ் டால்போட் பாரே, புதுச்சேரியில் வாக்களித்து, வாக்களிக்கும் செயல் முறையை மேற்பார்வையிட்டார். புதுச்சேரியில் உள்ள பிரான்சின் துணைத் தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள பியூரோ டி பிரான்ஸ் சார்பில், பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE