சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்படும், நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும், நிதியுரிமை - மொழியுரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் சனிக்கிழமை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
வெற்றிக்கு வழிநடத்திய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: ஜனநாயகத்தைக் காக்கும் இந்த மாபெரும் போரில், உணர்வு பூர்வமாக ஒருங்கிணைந்து வாக்களித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்த தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களுக்கு இக்கூட்டம் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வின் சர்வாதிகார - ஜனநாயக விரோத ஆட்சிக்குத் தக்க பாடம் புகட்டிட திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் 40க்கு 40 நாடாளுமன்றத் தேர்தல் முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஆட்சியின் மூலம் வழங்கியுள்ள நல்ல பல திட்டங்களுக்காக 221 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அதிக வாக்குளை வழங்கி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த மு.க.ஸ்டாலினுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும்,பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
பா.ஜ.க. அரசின் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் மீறி கன்னியாகுமரியில் துவங்கிய நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி காஷ்மீர் வரை பரவி, இன்றைக்கு இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கருத்தியல், அரசியல் சட்டம் ஆகிய அனைத்தின் மீதான தாக்குதலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றால், அதற்கான முழுப் பெருமையும், அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பை நல்கிய மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும் என்பதை இந்தக் கூட்டம் உவகையுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திய ஒற்றுமை, இந்தியா முழுமைக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.
கோவையில் முப்பெரும் விழா: கருணாநிதி நூற்றாண்டு விழாவை கடந்த ஓராண்டு சிறப்பாக கொண்டாடினோம். மாநிலம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. நாடாளுமன்ற வெற்றியை கருணாநிதியின் காலடியில் காணிக்கை ஆக்குவோம் என உறுதியேற்ற மு.க.ஸ்டாலின் அதனை செயல்படுத்தி காட்டிவிட்டார். அதன்படி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வருகிற ஜூன் 14-ஆம் தேதியன்று கோவையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
» “பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
» விருதுநகரில் பிரபல நகைக்கடையில் தீ விபத்து - போலீஸ் விசாரணை
நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைத்திடுக: சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவற்றின் பிறப்பிடமாக விளங்கிய இந்தியாவில் வெறுப்பு, பிளவு மனப்பான்மைகளை விதைத்து, மதவெறியைத் தூண்டி, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடலாம் என்று “ஒரே ஒரே” என்ற ஒற்றை நோக்கோடு பாஜக அரசு செயல்பட்டது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாடு உள்ளிட்ட - குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியது.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய ஏஜென்சிகளை எதிர்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு என்றே களமிறக்கி, அந்த அமைப்புகளின் நடுவுநிலைமையை மட்டுமின்றி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்கியது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசியல்சட்ட அமைப்புகளை முடக்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இனிமேலும் இதுபோன்ற “ஆபத்தான விளையாட்டுகளை” நடத்தாமல் இருக்கவே மக்கள் வலிமையான எதிர்க்கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றத்தை இந்தத் தேர்தல் வாயிலாக உருவாக்கியிருக்கிறார்கள். தான் நினைத்ததைச் செய்ய முடியாத அரசியல் நெருக்கடிக்குள் பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாகும். இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற - அரசியல்சட்ட விழுமியங்களையும் சிதைக்க நினைத்த பாஜக சிக்கலுக்கு ஆளாகி இருப்பதுதான் இந்த தேர்தலின் மாபெரும் வெற்றியாகும்.
தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்றத்தில் தேர்வு செய்து அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய நாட்டு மக்கள். அந்த மக்களின் உணர்வுகளை நிலைநாட்டிடும் வகையில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் செயல்பட்டு, நாட்டின் அரசியல்சட்டத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பினை திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எடுத்துக் கொள்கிறது என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிரகடனம் செய்கிறது.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த தேசப்பிதா மகாத்மா காந்தி, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அகற்றிய பிரதமர் மோடி அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் இக்கூட்டம், உடனடியாக அந்த தேசத் தலைவர்களின் சிலைகளை இருந்து இடத்திலேயே வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக, நிதியுரிமை - மொழியுரிமைக்கு குரல்: 10 ஆண்டு பாஜக ஆட்சியில் ஜி.எஸ்.டி இழப்பீடு தராமல், மெட்ரோ ரயில் நிதி ஒதுக்காமல், அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்தது பாஜக அரசு. ரயில் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள் அனைத்திலுமே தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்தது. தமிழ் மொழியை புறக்கணித்து, ஒன்றிய - மாநில உறவிற்கு நியமிக்கப்பட்ட ஆளுநர் மூலம் இடைவிடாத இடையூறு செய்து, தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்கள் போல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடத்தியது. அதற்குத்தான் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.விற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.
திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக, தமிழ்நாட்டின் நிதியுரிமை மற்றும் மொழியுரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக அயராது குரல் கொடுக்கவும், அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் செயல்படவும் இக்கூட்டம் உறுதி பூண்டுள்ளது. இந்தியக் கூட்டாட்சியின் மாண்பைக் காக்கவும், அரசியல் சட்ட விழுமியங்களின்படி நடந்து கொள்ளவும், சமூகநீதி - மதச்சார்பின்மை - மாநில சுயாட்சி - சமதர்ம சமநிலைச் சமூகம் - எல்லோர்க்கும் எல்லாம் என்ற மக்களாட்சிப் பண்புகளைப் பேணவும் திமுக என்றும் முன்னணிப் படையாகத் திகழும் என்று இக்கூட்டம் அறிவிக்கிறது.
நீட் எனும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக: நீட் தேர்வை, அதனை அமல்படுத்திய காலத்தில் இருந்து தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து வருகிறது. ஏழை - எளிய, நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் சமூக அநீதித் தேர்வாகவே அது அமைந்துள்ளது என்பதையும், லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து பயிற்சி மையங்களில் படிக்க வசதி வாய்ப்புள்ளவர்களுக்கான தேர்வு முறையாக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்து வந்தோம்.
இப்பயிற்சி முறையும், தேர்வு முறையில் மாணவர்களை மனவியல் வழியாக சிதைப்பதாக அமைந்தும் இருக்கிறது. அனிதா முதல் எத்தனையோ உயிர்களை இழந்து நிற்கிறோம். இது ஒரு பக்கம் என்றால், இத்தேர்வை நடத்தும் முறையும் சர்ச்சைக்குரியதாக மர்மமானதாக அமைந்துள்ளது. கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது, போலியான நபர்கள் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்வது, திருத்தும் முறையில் தில்லுமுல்லு எனப் பல்வேறு குற்றமுறைகள் இதில் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு நடைபெறும் போதும், முடிவுகள் வெளியாகும் போதும் இத்தகைய முறைகேடுகள் பொதுவெளியில் பேசப்படுகிறது. சில மாநிலங்களில் சிபிஐ இது தொடர்பான வழக்குகளை விசாரித்து சில மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்ட செய்தியையும் பார்க்கிறோம். எந்த வகையில் பார்த்தாலும் மோசமான, மோசடியான ஒரு தேர்வாக நீட் தேர்வு அமைந்துள்ளது.
இத்தேர்வை முற்றிலுமாக விலக்க வேண்டும், அல்லது தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை ஒருமனதாக மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் அதனை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காமல் மெத்தனம் காட்டினார் தமிழ்நாடு ஆளுநர். இத்தகைய சூழலில் ஒவ்வொரு ஆண்டையும் துன்ப துயரங்களோடு கடந்து வருகிறார்கள் மருத்துவம் படிக்கும் கனவில் இருக்கும் மாணவர்கள்.
இந்த ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி சர்ச்சை கிளம்பி உள்ளது. இனியும் இந்த மோசடித்தனமான தேர்வு முறை அறவே கூடாது. இத்தேர்வு முறையையே முழுமையாக விலக்க வேண்டும். அல்லது நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
நாடாளுமன்றத்தில் இதனை நாங்கள் எழுப்புவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களும், நிதிஷ் குமார் அவர்களும் இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் கவனித்து ஒன்றிய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து PSS அணியினரையே ஈடுப்படுத்துக: நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த Parliament Security Service (PSS) அணிக்கு மாற்றாக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள CISF வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தும் முடிவு கண்டிக்கத்தக்கது. அம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்ற என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமானது. பொது இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கும் - நாடாளுமன்றம் போன்ற இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கும், மலையளவு வேறுபாடுகள் உண்டு.
அங்கு வரும் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கெனப் பயிற்சி பெற்ற PSS அணியினருக்கு மாற்றாக, CISF வீரர்களை ஈடுபடுத்துவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டாக்கும். எனவே, நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியில், மீண்டும் PSS அணியினர் தொடர்ந்து ஈடுபடுத்திட இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago