தேமுதிக புகார் எதிரொலி: விருதுநகர் வாக்கு எண்ணிக்கை குறித்து விரிவான அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேமுதிக அளித்த புகாரையடுத்து, விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான தகவல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 10,63,721 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,265 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா 1,66,271 வாக்குகளும் பெற்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசிக் 77,031 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 9,408 வாக்குகள் பதிவானது. இதில், 4,379 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் பொது பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலமையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன் மற்றும் அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. 24 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 8 சுற்றுகளில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். 11-வது சுற்றுக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். ஆனாலும், இருவருக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. இதனால், வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றது.

அதேசமயம் பொறுமையாகவும், நிதானமாகவும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இரவு சுமார் 8 மணி அளவில் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டன. 24-வது இறுதிச் சுற்றில் 4,633 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தார். அதன்பின்னர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் விஜய பிரபாகரன் கண்கலங்கினார். அதையடுத்து, விஜய பிரபாகரன், அவருடன் வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினர்.

தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு 5-ம் தேதி அதிகாலை சுமார் 1 மணி அளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன் அறிவித்தார். அதையடுத்து, வெற்றிபெற்றதற்கான சான்றிதழும் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்பட்டது. ஆனால், விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்து தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் புகார் அளித்தார்.

மேலும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் வழக்கறிஞர் ஜனார்த்தனன் பேட்டியளித்தார். இப்புகார் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அதோடு, இப்புகார் தொடர்பாக விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலனிடமும், தேர்தல் பொது பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் விரிவான தகவல்களையும், வீடியோ ஆதாரங்களையும் கேட்டுள்ளது.

இதையடுத்து, தேவையான அனைத்து ஆதாரங்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும் என்றும் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்