“மோடியின் சர்வாதிகார போக்குக்கும் நிதிஷ், சந்திரபாபு நாயுடுவுக்கும் ஒத்துவராது” -  நாராயணசாமி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “நரேந்திர மோடியின் சர்வாதிகார போக்குக்கும், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் ஒத்துவராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்துவிடும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வந்த கருத்துக் கணிப்புகளில் பாஜக தனியாக 365 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இவர்கள் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெறும் என்று கோஷமிட்டு தேர்தலை சந்தித்தனர். ஆனால், இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டி உள்ளனர்.

ஆணவம், எதிர்க்கட்சிகளை பழிவாங்குகின்ற செயல்பாடுகள், தொழிலதிபர்களை மிரட்டி அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு பணம் வசூல் செய்தல், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களை விலைக்கு வாங்குதல், வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை வைத்து ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களை அச்சுறுத்தி தங்கள் பக்கம் இழுத்து பல மாநிலங்களில் ஆட்சி மாற்றம் செய்தல் போன்ற அராஜக வேலைகளை எல்லாம் செய்து வந்தார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், விவசாயிகளுக்கான கருப்புச் சட்டம், இந்தி திணிப்பு, நீட் தேர்வு, என்ஆர்சி போன்ற மக்கள் விரோத சட்டங்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பிவிட்டு ஒருதலைபட்சமாக நிறைவேற்றினார்கள். இப்பொழுது பாஜக 240 இடங்களை பிடித்துள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டு மாநில கட்சிகளோடு சமரசம் செய்து அவர்களுக்கு அடிபணிந்து மீண்டும் நாளைய தினம் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார்.

இது பாஜகவுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் தகுந்த நேரத்தில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். உண்மையிலேயே நரேந்திர மோடி ஒரு சிறந்த அரசியல்வாதி என்றால் அவர் பிரதமர் பதவியை நாடி சென்றிருக்கக்கூடாது. வெளிநாட்டு ஊடகங்கள் எல்லாம் நரேந்திர மோடி தோற்கடிக்க முடியாதவர் என்று எழுதினர். ஆனால், மக்களவைத் தேர்தலில் இந்திய நாட்டு மக்கள் நரேந்திர மோடியின் அராஜகத்துக்கு தகுந்த பாடம் கற்பித்து, எதிர்கட்சிகளுக்கு புகழாரம் செய்துள்ளனர்.

இந்த ஆட்சி குறை பிரசவமாகத்தான் இருக்கும். 5 ஆண்டுகாலம் இந்த ஆட்சி இருக்காது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் அனுபவமிக்க அரசியல்வாதிகள். மோடியின் சர்வாதிகார போக்குக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்து விடும். நரேந்திர மோடியை அவர்களின் கூட்டணிக் கட்சிகளே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 1 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதிகாரம், பண பலத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கனவு கண்டது. இவர்களுக்கு, புதுச்சேரி மாநில மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

முதல்வர், அமைச்சர்கள் என அனைவருடைய தொகுதிகளிலும் தோல்வியுற்றுள்ளனர். ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி, மக்களை மதிக்காத ஆட்சி, தங்களுடைய திட்டங்களை மக்களுக்கு திணிக்கின்ற ஆட்சியாக இருந்த காரணத்தால் மக்கள் வெறுப்படைந்து இருக்கிறார்கள். கலால் உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி சேரும்போது, முதல்வர் ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் கூட்டணி சேருகிறேன் என்றார். 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார். அதை 300 முறை சொல்லியுள்ளார். ஆனால் நடந்தது என்ன? மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்று வரை பிரதமரை, முதல்வர் ரங்கசாமி இரண்டு முறை சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி.

அப்படி இருக்கும்போது மாநில அந்தஸ்து பெறுவதில் அவர்களுக்குள் என்ன பிரச்சினை?. புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீரழிந்துவிட்டது. ரங்கசமிக்கு வேண்டியது முதல்வர் நாற்காலி. அதற்காக அவர் எதையும் செய்வார். காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றியின் மூலமாக, நமச்சிவாயம் செல்லாக்காசு என்று தெளிவாக தெரிகிறது. புதுச்சேரி மாநில மக்களுக்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதனால் தான் ரங்கசாமியை அவருடைய தொகுதி மக்கள் தோற்கடித்துள்ளனர்.

உண்மையிலேயே இவர்களுக்கு சூடு சொரணை இருந்தால் தோல்விக்கு பொறுப்பேற்று கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும். இனிவரும் காலம் இண்டியா கூட்டணியின் காலம். மோடியின் காலம் அஸ்தமனமாகி இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் மறுபடியும் எங்கள் கூட்டணியின் கை ஓங்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE